India

அடுத்தது தாஜ்மஹாலா? மதச்சார்பின்மையை கொல்ல துடிக்கும் இந்துத்துவம்!

உத்தரப் பிரதேசத்தில் இந்துத்துவவாதிகளின் ஆதிக்க போக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. சில நாட்களுக்கு முன் ஞானவாபி மசூதியில் இந்து முறை வழிபாடு நடத்தியது. தற்போது, ஒவ்வொரு ஆண்டும் ஷாஜகான் நினைவு நாள் விழா நடப்பதை, தடையிட திட்டமிட்டுள்ளது.

உலக கட்டிடக்கலைகளில் முதன்மையான கட்டிடமாக, தாஜ் மஹால் உள்ளது. அதனை நிறுவிய முகலாய மன்னர் ஷாஜகான் நினைவு நாளை ஒட்டி, பிப்ரவரி மாதத்தில் மூன்று நாள் நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் ‘உர்ஸ்’ என்கிற நினைவு விழா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது ஷஹித் இப்ராஹிம் தலைமையிலான கமிட்டி.

பிப்ரவரி 6 - 8 தேதிகளில் நடக்கவுள்ள இந்நிகழ்வில், வழிபாடுகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. அதற்கென 1.8 கி.மீ பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் தற்போது, ‘உர்ஸ்’ நிகழ்வு நடத்த நிரந்தர தடை விதிக்க கோரி, ஆக்ரா நீதிமன்றத்தை நாடியுள்ளது அகில பாரத இந்து மகாசபை. நீதிமன்றமும் ஒப்புதல் அளித்து, மார்ச் 4ம் தேதி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இந்து மகாசபை தாக்கல் செய்த மனுவில், ’தாஜ்மஹாலில் வழிபாடு செய்யவும், ‘உர்ஸ்’விழா நடத்தவும் யார் அனுமதி கொடுத்தது என கேட்டு RTI விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. அதற்கு தொல்லியல் துறை, ’முகலாய அரசு கொடுக்கவில்லை, ஆங்கிலேய அரசும் கொடுக்கவில்லை, இந்திய அரசும் கொடுக்கவில்லை’ என விடையளித்திருக்கிறது. எனவே, ‘உர்ஸ்’விழா நடத்த தடை விதிக்க வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் இரு மசூதிகளை, இந்துத்துவவாதிகள் கையகப்படுத்திய நிலையில், உலக புகழ்பெற்ற தாஜ்மஹால் தொடர்பான நிகழ்விற்கும் இடையூறை அவர்கள் உருவாக்கியுள்ளது, இந்தியாவின் மதச்சார்பின்மைக்கான ஆணிவேரை அறுக்கும் வேலையாகவே கருத வேண்டியிருக்கிறது.

Also Read: அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆணவமாக நடந்து கொள்ளும் உத்தரப் பிரதேச அரசு: முரசொலி கடும் தாக்கு!