India
புதுவை : துணை குடியரசு தலைவர் நிகழ்ச்சியில் பத்திரிகையளார்கள் அவமதிப்பு - விழாவை புறக்கணித்ததால் பரபர !
இந்திய துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் இன்று சென்னை மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள வருகை தந்திருந்தார். அந்த வகையில் இன்று மாலை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ‘விக்ஷித் பாரத்-2047’ என்ற ஒன்றிய அரசின் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
இந்த விழாவில் பங்கேற்க பத்திரிகையாளர்களுக்கு புதுவை பல்கலைக்கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் உளவுத்துறை மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை மூலம் இன்று மதியம் 2.30 பல்கலைக்கழக விழாவுக்கு தனி வாகனம் மூலம் பத்திரிகையாளர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்பேரில், பத்திரிகையாளர்கள் மதியம் 2.30 மணிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் 2 மணி நேரம் காக்க வைக்கப்பட்டு, சுமார் 4.30 மணிக்கு வாகனம் மூலம் பல்கலைக்கழகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து விழா நடைபெற்ற அரங்க கட்டிடத்திற்கு பத்திரிகையாளர்கள் சென்றனர். அங்கு விழா நடைபெற்ற அரங்கிற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டனர்.
இதனால் அதிருப்தி அடைந்த பத்திரிகையாளர்கள், உடனே பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் காவலர்களிடம் ஏன் அழைப்பு விடுத்துவிட்டு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினர். உடனே மக்கள் தொடர்பு அதிகாரி வாட்ஸ்அப் மூலம் விடுத்த அழைப்பை நீக்கினார். இதற்கிடையே மக்கள் தொடர்பு அதிகாரியிடம் முறையிட்ட நிகழ்வை சில பத்திரிகையாளர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர்.
உடனே அங்கு வந்த சீனியர் எஸ்.பி. ஸ்வாதி சிங் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பிடுங்கி வீடியோக்களை டெலிட் செய்தார். மேலும், அவர் இங்கு யாரும் நிற்க கூடாது என கடுமையான வார்த்தைகளால் கூறி பத்திரிகையாளர்களை வெளியே செல்லுமாறு எச்சரித்தார். இப்பிரச்னை குறித்து விழாவுக்கு வருகை தர இருந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து முறையிட பத்திரிகையாளர்கள் முடிவு செய்து காத்திருந்தனர்.
அப்போது, சீனியர் எஸ்பி சுவாதி சிங், ஐ.ஆர்.பி.என் போலீசாரை வைத்து பத்திரிகையாளர்கள் விழா நடைபெறும் பகுதியில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். அதன்பேரில் அங்கு ஐ.ஆர்.பி.என் போலீசார் குவிக்கப்பட்டு பத்திரிகையாளர்களை வெளியேற்ற முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பத்திரிகையாளர் காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறினர்.
அப்போது, அங்கு வந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பத்திரிகையாளர்களை விழாவுக்கு வருமாறும், விழா முடிந்த பிறகு பிரச்னை குறித்து பேசி கொள்ளலாம் என்றும் கூறி சமாதானம் செய்தார். அதை பத்திரிகையாளர்கள் ஏற்காமல் விழாவை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறினர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!