India

நேதாஜிக்கு சாவர்க்கர் இழைத்த கொடூரமான துரோகம் பற்றி தெரியுமா?

இந்திய விடுதலை போரில் சாவர்க்கர் தவிர ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மற்றும் இந்துத்துவா கும்பல்கள் எதுவும் பங்கேற்கவில்லை என்பதே வரலாறு. பங்கேற்ற சாவர்க்கரையும் ‘மன்னிப்பு’க் கடித சாவர்க்கர் என்றே வரலாறு சொல்கிறது. இங்கிலாந்தில் கைது செய்யும் போது இந்திய சுதந்திரப் போராட்ட வீரராகதான் சாவர்க்கர் இருந்தார். ஆனால் அந்தமான் சிறையில் வைக்கப்பட்டபோது, 1911, 1913, 1914, 1918, 1920 - ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை கருணை மனு அனுப்பி வைத்தார் அந்த வீர் சாவர்க்கர்.

அதிலும், “வல்லமை பொருந்தியவரே கடுமையாக இருக்க முடியும். மனம் திருந்திய குழந்தை பெற்றோர் போன்ற அரசாங்கத்தின் வாயிலைத் தவிர வேறு எங்கு திரும்பி வருவது?” என்று பிரிட்டிஷ் அரசைக் கேட்டிருக்கிறார் சாவர்க்கர். அத்தகைய வாரிசு வழியே வந்த ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க கூட்டம் இன்று விடுதலை போராட்ட வரலாற்றை திரிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகும் கூட மூவர்ணக் கொடியை தேசியக் கொடியாக ஏற்க மறுத்தது ஆர்.எஸ்.எஸ். ஆனால், இன்று தேசியக் கொடி மீதும், இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகள் மீதும் திடீர் பாசம் பாஜக கும்பலுக்கு வந்துள்ளது. அதற்கு காரணம் தேர்தல் ஒன்றே! இதில் பாஜக பிரச்சாரக்குழு தலைவராக செயல்படும் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ச்சியாக விடுதலை போராட்ட வரலாற்றை சிதைத்து வருகிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனியார் பயிற்சி நிறுவனத்துக்கு சென்ற ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மறக்கடிக்கப்பட வேண்டும் என்றே இங்கு ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டு அதை செய்தார்கள் என அவதூறு பரப்பினார். அதனைத் தொடர்ந்து தற்போது, தேச தந்தை மகாத்மா காந்தியின் தியாகத்தை மறைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை. நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் முக்கிய காரணம் என்று தெரிவித்திருக்கிறார். தேச தந்தை என்ற பட்டத்தை மாத்மா காந்தியடிகளுக்கு வழங்கியதே நேதாஜி தான் என்பதும், சுபாஷ் சந்திர போஸை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என காந்தி அழைத்த வரலாறு கூட தெரியாமல் ஏதேதோ உளறிக் கொட்டியுள்ளார் ஆர்.என்.ரவி.

இந்திய விடுதலை போர் குறித்து ஆளுநர் தெரிந்துக்கொள்ள சில வரலாற்று தகவல்களை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதற்கு இராணுவப் படையை ஏற்பாடு செய்ய முயற்சித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இன்று நேதாஜி மீது ஆர்.எஸ்.எஸ் பாசம் உள்ளது போல் நடித்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ்ஸால் போற்றப்பட்ட வீர் சாவர்க்கரின் தலைமையிலான இந்து மகாசபை நேதாஜிக்கு இழைத்த கொடூரமான துரோகம் பற்றி தெரியுமா?

நேதாஜி, இரண்டாம் உலகப் போரின் போது, நாட்டின் விடுதலைக்காக வெளிநாட்டு ஆதரவைப் பெற முயன்றார். குறிப்பாக ஆங்கிலேயருக்கு எதிராக இராணுவத் தாக்குதலை ஏற்படுத்த சுபாஷ் சந்திர போஸின் தலைமையில், 'ஆசாத் ஹிந்த் ஃபவுஜ்' (இந்திய தேசிய ராணுவம்) உருவானது.

அதேவேளையில் பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு முழு ராணுவ ஒத்துழைப்பை வழங்கியவர் சாவர்க்கர். 1941ல் பாகல்பூரில் நடந்த இந்து மகாசபையின் 23வது அமர்வில் உரையாற்றும் போது சாவர்க்கர் கூறியதாவது: “இப்போது கரையை எட்டியுள்ள இந்த போரால் நமக்கு நன்மைகள் உண்டு. ஒன்று இது இராணுவமயமாக்கல் இயக்கத்தை தீவிரப்படுத்தும். மேலும் ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் உள்ள இந்து மகாசபையின் ஒவ்வொரு கிளையும் இந்து மக்களை எழுப்புவதில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இராணுவம், கடற்படை, வான்வழிப் படைகள் மற்றும் பல்வேறு போர்-கைவினைத் தொழிற்சாலைகளில் இந்து மக்களை இந்து மகாசபையினர் சேர்த்துவிட வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, சாவர்க்கர் எந்த அளவிற்கு ஆங்கிலேயர்களுக்கு உதவத் தயாராக இருந்தார் என்பது அவரது பின்வரும் வார்த்தைகளின் மூலம் தெளிவாகத் தெரியும். “ஜப்பானின் போரில் (நேதாஜி படை) பிரிட்டனின் எதிரிகளின் தாக்குதலுக்கு நேரடியாகவும் உடனடியாகவும் நம் ஈடுபடவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், போரின் அழிவுகளுக்கு எதிராக நமது வீட்டை (இந்து மகாசபையை) பாதுகாக்க வேண்டும், மேலும் இது பிரிட்டீஸ் அரசாங்கத்தின் போர் முயற்சியை தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே செய்ய முடியும்.

எனவே, இந்து மகாசபைகள், குறிப்பாக வங்காள மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களில் உள்ள இந்துக்களை அனைத்து ஆயுதங்களையும் கொண்ட இராணுவப் படைகளுக்குள் நுழைய தூண்ட வேண்டும். மேலும் பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் இந்துக்கள் சேர்க்கப்பட்டால்தான் நமது இந்து தேசம் உருவாகும்.” எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

பின்னர் பாகல்பூரில் தனது உரையை முடிக்கும்போது, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போர் முயற்சிகளில் சேருமாறு இந்துக்களுக்கு சாவர்க்கர் மீண்டும் வலியுறுத்தினார். பிரிட்டீஸ் ராணுவத்திற்கு இந்துகளை சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார் சாவர்க்கர். குறிப்பாக, சாவர்க்கர் தனது 59 வது பிறந்தநாளில் இந்து மகாசபையின் மூலம் பிரிட்டிஷ் இராணுவப் படைகளுக்கு பெரிய அளவிலான ஆட்சேர்ப்பு முகாமை நடத்தி, “இராணுவ சேவையில் ஈடுபட தகுதியுள்ள ஒவ்வொரு இந்துக்களுக்கும் ஈடுபட வேண்டும்” எனவும் அழைப்பு விடுத்தார். அதுமட்டுமல்லாது, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உயரிய ராணுவ அமைப்புகள் சாவர்க்கருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது. அதில் சாவர்க்கரால் முன்மொழியப்பட்ட நபர்களும் இருந்தனர்.

சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்கள் ஆங்கிலேய ஆட்சியை ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதற்கான உத்தியை வகுக்க முயன்றபோது பிரிட்டிஷ் போர் முயற்சிகளுக்கு சாவர்க்கரின் முழு ஆதரவையும் அளித்துள்ளார். இந்தியாவை விடுவிக்க நேதாஜி மேற்கொண்ட முயற்சிகளை சாவர்க்கர் முற்றிலும் நிராகரித்தார். உண்மை வரலாறு இவ்வாறு இருக்க காந்தியடிகளின் தியாகத்தை மறைத்து, சாவர்க்கரை முன்னிறுத்தும் முயற்சியே ஆளுநரின் இத்தகைய பேச்சு என்பதை நாட்டு மக்கள் உணரவேண்டும்.

Also Read: “பிராமணர்களுக்கு சேவை செய்வது சூத்திரர்கள் கடமை..” - சாவர்க்கர் பாணியில் பின்வாங்கிய பாஜக முதல்வர்!