India

குஜராத் கலவரம்: 22 ஆண்டுகளாகியும் மறையாத வடு!

பிரதமர் மோடி, 2002 ஆம் ஆண்டு குஜராத் முதலைமைச்சராக இருந்த போது, அயோத்தியில் இருந்து அகமதாபாத் திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி விரைவு வண்டி, கோத்ரா நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டது.

தொடர்வண்டி நிறுத்தியது தொடர்பாக, (இந்து வழிபாட்டாளர்கள்)பயணிகளுக்கும், கோத்ரா நிறுத்தத்தின் விற்பனையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. பின் வன்முறையாக வெடித்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக, 4 ரயில் பெட்டிகள் தீப்பற்றின. இதன் காரணமாக சுமார் 59 பயணிகள் இறக்க நேர்ந்தது.

குஜராத் உயர் நீதிமன்றமும், தீவிபத்து எதேச்சையாகவே நடந்துள்ளது என பல்வேறு விசாரணைகளுக்கு பிறகு தீர்ப்பளித்தது. எனினும், இது பாகிஸ்தானியர்களால் தூண்டப்பட்டது என சற்றும் தொடர்பில்லாத குற்றச்சாட்டை பாஜக பிரசாரம் செய்தது. விளைவாக, நரோடா என்ற பகுதியில் கலவரம் வெடித்தது.

ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும், நூற்றுக்கணக்கான இந்துக்களும் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, அப்போதைய குஜராத் முதல்வர் மோடியின் மேல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது தொடர்பான இணையத் தொடரை அண்மையில் வெளியிட்டது BBC. அதில், மோடியின் செயல்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், இணையத் தொடரையே முடக்கியது, ஒன்றிய பாஜக.

உச்சநீதிமன்றத்தில் அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிற பில்கிஸ் பானோ வழக்கும், குஜராத் கலவரத்தை சார்ந்ததே. இவ்வாறு இருக்கையில், கடந்த ஒரு மாத காலமாக குஜராத் கலவரத்திலிருந்து உயிர் தப்பிய இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக்கு விலக்களித்துள்ளது காவல்துறை.

ராமர் கோவில் திறப்பு காரணமாக, இந்த விலக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து, கலவரத்தில் பிழைத்த சயத் நூர் பனோ சொல்கையில், “22 ஆண்டுகள் கடந்துவிட்டன. இருப்பினும் இந்துக்கள் பெரும்பான்மை கொண்ட ஊர்களுக்கு செல்ல, அச்சமாக உள்ளது. அங்கு வாழ்வதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

”பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதால், கடும் அச்சத்தில் உள்ளோம். இருப்பினும், எங்கள் குரல் யாருக்கு கேட்க போகிறது? பாதுகாப்பு திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை,” என்று அச்சத்துடன் The Wire ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கான அச்சத்துடன் மக்கள் வாழக்கூடிய நிலை உருவாக்கியுள்ளது. இச்சூழலை அம்பலப்படுத்தும் BBC போன்ற ஊடகங்களின் பதிவுகளையும் பாஜக அரசு நீக்கி வருகிறது.

தேசிய அளவில் ஒற்றைக் குரல் ஒலித்து, ஒற்றைத்தன்மை மட்டுமே நீடிக்க வேண்டும் என்ற அரசியலை, ராமர் கோவில் உள்ளிட்ட பல நிகழ்வுகள் மூலம் செயல்படுத்தி வருகிறது பாஜக.

இந்திய ஜனநாயகம், இத்தனை நாளும் நீடிக்கக் காரணமாக இருந்த அதன் பன்முகத்தன்மைக்கு, பாஜகவின் ஒற்றைத்தன்மை சவால் விடுக்கிறது.

ஜனநாயகத்துக்கு மட்டுமின்றி சாமானியர் வாழ்க்கைகள் நிலைக்கவும் அச்சவாலை வெல்ல வேண்டியது நம் கடமையாக இருக்கிறது.

Also Read: “பாலியல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்ட குஜராத் அரசு”- பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி