India

பில்கிஸ் பானு வழக்கு : முடிவடைந்த உச்சநீதிமன்ற கெடு.. குஜராத் சிறையில் சரணடைந்த 11 பாலியல் குற்றவாளிகள்!

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின்போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. மேலும் அவரது குடும்பத்தாரையும், அவரது 2 வயது மகன்களையும் கொடூரமாக கொன்றது.

இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், இதில் தொடர்புடைய 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு கடந்த 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளான 11 பேரையும், குஜராத் பா.ஜ.க அரசு 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்ததது.

இதனை எதிர்த்து பில்கிஸ் பானு மற்றும் வேறு சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், " பில்கிஸ் பானு வழக்கின் விசாரணை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் 11 குற்றவாளிகளை விடுவிப்பதற்கான அதிகாரம் குஜராத் அரசுக்கு கிடையாது.பல உண்மைகளை மறைத்து மோசடி மூலம் நீதிமன்றத்தில் விடுதலை செய்வதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டும்" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

21 ஆம் தேதிக்குள் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் சரணடையவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், அதில் பலர் தலைமறைவாயதாக செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளில் சிலர் சரணடைவதற்கு அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர், ஆனால், அந்த மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

இதனால் நேற்றோடு சரணடைய அவகாசம் முடிவடையவிருந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் நேற்று இரவு 11 45 மணிக்கு குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா கிளை சிறையில் சரணடைந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பாலியல் குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்ததை உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில், அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read: மோடி ஆட்சியில் பாகிஸ்தானை விட மோசமான இந்தியாவின் நிலை : ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய முரசொலி !