India

பாஜகவினரை விட பாஜகவின் வேலையை சிறப்பாக பார்க்கும் ஆளுநர்கள்

ஆளுநர்களின் உதவியுடன் மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்குள் ஒன்றிய அரசு தொடர்ந்து தன் மூக்கை நுழைத்து வருகிறது. ஒன்று, மாநில ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும். அல்லது ஆளுநரைக் கொண்டு மாநில அரசுகளின் செயல்பாடுகளை முடக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்களின் பணிகள், இவை மட்டுமாகத்தான் இருந்து வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டில், ஆர். என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக பதிவியேற்றதிலிருந்து, திமுக எதிர்ப்பை மட்டும்தான் முழு வேலையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை அரசியல், பொருளியல், மொழிப்பற்று என எதையும் அவர் பொருட்படுத்துவதில்லை. மட்டுமில்லாமல், ஒரு படி மேலே சென்று அவற்றை அவமதிக்கும் வேலையையும் அவர் செய்கிறார்.

வள்ளுவருக்கு காவி உடை அணிவித்த படங்களை வெளியிடுவது, ’தமிழ்நாடு’ என்கிற வார்த்தையை புறக்கணிப்பது, வள்ளலாரை பற்றி அவதூறு பேசுவது, சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது அல்லது கிடப்பில் போடுவது போன்ற ஆளுநர் ரவியின் நடவடிக்கைகள் எல்லாமும், தமிழ்நாட்டு அரசுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களுக்கும் எரிச்சலூட்டுபவையாகவே இருக்கின்றன.

பாஜக ஆட்சியில் இல்லாத எல்லா மாநிலங்களிலும் இதுதான் நிலையாக இருக்கிறது.

அண்டை மாநிலமான கேரளத்தில், ஒன்றிய அரசின் நிதி வழங்கீடு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்ற நிலையில், ஒன்றியத்திற்கு வக்காலத்து வாங்கி, ஆளும் CPI(M) கட்சியை குற்றஞ்சாட்டிவருகிறார் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான்.

பஞ்சாப் மாநிலத்திலும், சட்டமன்றத்தில் இயற்றப்படும் பல்வேறு சட்டங்களுக்கு பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்தார். உச்சநீதிமன்றம் கூட அவரைக் கண்டித்தது.

இந்த வரிசையில் தற்போது இன்னொரு சம்பவம்!

ராஜஸ்தான் சட்டமன்றத்துக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு நடக்கும் சட்டமன்ற அமர்வில் ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா நேற்று பேசினார். ஒன்றிய பாஜகவின் திட்டங்களை பட்டியலிட்ட அவர், ராஜஸ்தானில் இதற்கு முன் இருந்த காங்கிரஸ் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தும் பேசியிருக்கிறார்.

இந்திய அரசியலைமைப்பின்படி, ஆளுநர் பதவி கட்சி சார்பற்ற பதவி ஆகும். ஆளுநருக்கென தனிப்பட்ட அதிகாரமும் எதுவும் கிடையாது. ஆனால் பாஜகவின் உறுப்பினர்களை விட அதிகமாக பாஜவை தூக்கிப் பிடிக்கும் வேலையை ஆளுநர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும், ஒவ்வொரு மாநில ஆளுநருக்கான ஊதியத்திலிருந்து, அன்றாட செலவுகள் வரை எல்லாவற்றையும் வழங்குவது, அந்தந்த மாநில அரசுகள்தான். ஆனால் சற்றும் இதை பொருட்படுத்தாமல் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி, ஊட்டி ஆளுநர் மாளிகையில் பல கோடி ரூபாய் செலவில் அவரது வீட்டு திருமண நிகழ்வை கொண்டாடினார். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை தன் தனிப்பட்ட செலவுக்காக விரயமாக்கினார்.

ஆளுநர்களின் இத்தகைய போக்கு, இந்திய அரசமைப்புக்கு மட்டுமின்றி, கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய ஜனநாயகத்திற்கும் எதிரானது.

Also Read: ”ஆளுநர் பதவி என்பது அதிகாரம் பெற்ற பதவி அல்ல” : உண்மையை ஒப்புக்கொண்ட ஜார்க்கண்ட் ஆளுநர்!