India

“அயோத்தி மார்க்...” : பாபர் சாலை பெயர் பலகையில் மர்ம நபர்கள் ஒட்டிய போஸ்டரால் டெல்லியில் பரபர !

ஒன்றியத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இஸ்லாமியர்கள் போன்ற சிறுபான்மையினர் மீதான தாக்குதல், அடக்குமுறைகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் தற்போது இராமர் கோயில் எழுப்பப்பட்டு, வரும் 22-ம் தேதி அது திறக்கவும்படவுள்ளது.

இதனால் இந்துத்வ கும்பல் ஆங்காங்கே பல்வேறு ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அண்மைக்காலமாக டெல்லியில் முகலாய அரசர்களின் பெயர்கள் கொண்ட தெருக்கள், பகுதிகளின் பெயர்களை எல்லாம் டெல்லி மாநகராட்சி மாற்றி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு (2023) முன்னர் டெல்லியில் அமைந்திருக்கும் குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டத்தின் (Mughal Gardens) பெயரை 'அம்ரித் உத்யன்' (Amrit Udyan) என்று பெயர் மாற்றம் செய்தது ஒன்றிய அரசு.

அதோடு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவுரங்கசீப் லேன் என்ற பெயருக்கு பதிலாக தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் என்று பெயர் சூட்டப்பட்டது. தொடர்ந்து இப்படி பல விஷயங்கள் நடக்கும் நிலையில், அவ்வப்போது டெல்லியில் இருக்கும் இஸ்லாமிய பெயர்கள் கொண்ட இடங்களில் சாயம் உள்ளிட்டவை பூசி இந்துத்வ கும்பல் ரகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது டெல்லியில் இருக்கும் 'பாபர் சாலை' என்ற பெயர் பலகையில் 'அயோத்யா மார்க்' (அயோத்தி மார்க்கம்) என்று குறிப்பிட்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்த புகைப்படம், வீடியோ உள்ளிட்டவை இணையத்தில் வைரலாகி வலுத்த கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், நபர் ஒருவர் அந்த ஸ்டிக்கரை அகற்றியுள்ளார்.

Also Read: ”ராகுல் காந்தியின் யாத்திரையை யாராலும் தடுக்க முடியாது” : மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டம்!