India

எவரையும், எந்தக் கருத்தையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சனாதனம்:

இந்துத்துவத்தின் ஆணிவேர் எனப்படுகிற மநு நூல், சனாதன தர்மம் போன்றவை, பொதுமக்களை அடிமைப்படுத்தி, அவர்களின் அடிப்படை உரிமைகளை ஒழித்து, சமத்துவத்திற்கு முற்றிலும் எதிரான, பெண்ணடிமைத்தனத்தைத் தூண்டுகிற ஒரு வாழ்வியலுக்கான வழிமுறையாகும்.

அவ்வாறான ஒடுக்குமுறை வாழ்வியலை எதிர்த்து, கடந்த செப்டம்பர் 2-ம் நாள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில், ஒட்டுமொத்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக கூட்டத்தின் அடிப்படை கொள்கையாக விளங்கும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்திப் பேசினார்.

அப்பேச்சுக்கு இந்துத்துவவாதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு வழக்குகள் பதிந்தனர். எனினும், முன்வைத்த கருத்தியலிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்றும் சமூகநீதியை நிலைநிறுத்துவதே தம் கொள்கை எனவும் சனாதன ஒழிப்பை தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

இது தொடர்பாக, உச்சநீதிமன்றம், பாட்னா சிறப்பு உயர்நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் இந்துத்துவவாதிகளால் பதியப்பட்ட வழக்குகளை துணிச்சலாக சந்தித்தும் வருகிறார்.

ராமர் கோவில்:

முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறி 1992-ம் ஆண்டு அத்வானி தலைமையில் ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினரால் இடிக்கப்பட்டது. இவ்விடத்தில் தான் ராமர் பிறந்தார் என்பதற்கான தக்க சான்றுகள் இல்லாத நிலையையும் பொருட்படுத்தாமல், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோவில் கட்டுமானத்தை தொடங்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட கோவில் வேலைகள் முடுக்கி விடப்பட்டு, தற்போது ஜனவரி 22 ஆம் நாள் ராமர் கோவில் திறப்பு விழா திட்டமிடப்பட்டிருக்கிறது. இஸ்லாமியரின் வழிபாட்டுத் தலத்தை இடித்த குற்றவுணர்ச்சி சிறிதும் இல்லாமல் ராமர் கோவில் திறப்புக்கான கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது சங்கப் பரிவாரக் கூட்டம்.

இத்தகைய பின்னணியில்தான், ராமர் கோவில் திறப்பு விழா குறித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ”முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னது போல, நாங்கள் எவ்வித மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. எந்த கோவிலுக்கும் எதிரானவர்களும் அல்ல. ஆனால் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டிருப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை,” என தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

எல்லாவற்றையும் அழித்து வளரும் இந்துத்துவத்தின் போக்கை வன்மையாக எதிர்த்து, இந்திய நாட்டில் அனைத்து மதங்களுக்கும் சரிவிகித உரிமைகள் தரப்பட வேண்டும் என்ற அரசியல் சாசன விழுமியத்தை உறுதிப்படுத்துவதில் அமைச்சர் உதயநிதியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

கருத்தியல்:

சனாதன எதிர்ப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,

“சனாதன எதிர்ப்பில் நான் என்றும் பின்வாங்கப் போவதில்லை. இந்தக் கருத்து புதிதாக ஒன்றும் நான் பேசவில்லை. அம்பேத்கர், பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியிலேயே என் கருத்தியல் அமைந்துள்ளது. கருத்தியல் என்பது எங்களுக்கு, அதிகாரத்தைவிட முக்கியமானது,” என ஆரியத்துக்கு எதிரான திராவிடக் கருத்தியலில் தான் கொண்டிருக்கும் உறுதியை வெளிப்படுத்தினார் உதயநிதி ஸ்டாலின்.

பொறுப்பு:

அண்மையில் வெற்றிகரமாக நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அடுத்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் முதலீடுகளைப் பெற வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அச்சமயத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்படுவார் என்ற ஒரு வதந்தி பரப்பப்பட்டது.

’துணை முதல்வர்’ வதந்தியைக் குறித்து செய்தியாளர்கள் கேட்க, “ஆம், அமைச்சர்கள் அனைவரும் முதல்வருக்கு துணையாக தான் உள்ளோம்,” என்ற அமைச்சர் உதயநிதியின் மதிநுட்பம் நிறைந்த பதில், வதந்திகளை தவிடுபொடியாக்கியது. அமைச்சரின் பதிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பாராட்டினார்.

எந்தக் கேள்வியாக இருந்தாலும், அதற்கு நேரம் எடுத்துக் கொண்டு விடையளிக்காமல், மனதில் தோன்றுவதை ஒற்றை சொற்றொடரில் வெளிப்படையாக தெரிவிக்கும் இயல்பு, அமைச்சர் உதயநிதியின் தனித்துவமாக தமிழ்நாட்டு அரசியல் வெளியில் கருதப்படுகிறது.

Also Read: உதயநிதி ஸ்டாலின், சமரசமற்ற தமிழ் சமரின் தொடர்ச்சி!