India

தொடரும் மாணவர்கள் தற்கொலை : தனியார் பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தது ஒன்றிய அரசு !

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

நீட் தேர்வு அமலுக்கு வந்ததில் இருந்து, தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் பயிற்சி மையங்கள் லட்ச கணக்கில் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. மேலும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைப்பளுவால் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரிலும் நூற்றுக்கணக்கான தனியார் தேர்வு பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தனியார் பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோட்டா நகரில் மட்டும் கடந்த ஓராண்டில் 26-க்கும் அதிகமான மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கோட்டாவில் மட்டும் கடந்த ஏழு ஆண்டுகளில் 121 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தனியார் பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் புதிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறைகள் படி பொய்யான, தவறான, மோசடியான விளம்பரங்களை வெளியிட தடை விதிக்கப்படும் என்று ஒன்றிய நுகர்வோர் துறை தெரிவித்துள்ளது. விளம்பரங்களில் 100% வெற்றி என்கிற உத்தரவாதத்தை வழங்க தடை விதிக்கப்படும், ஒரு நிறுவனத்தில் சேர்ந்து படித்தால் நூறு சதவீதம் வெற்றி, குறிப்பிட்ட ரேங்க், மதிப்பெண் போன்ற எந்த உத்திர வாதத்தையும் வழங்க கூடாது, அப்படி உரிமை கோரி விளம்பரங்கள் வெளியிடுவது குற்றமாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பொய்யான விளம்பரங்கள் வெளியிட்டால் அபராதம் விதிப்பது, பயிற்சி நிறுவனங்களுக்கானஅனுமதி ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி அதுபோன்று பொய்யான விளம்பரங்களை வெளியிட்ட 31 பயிற்சி நிறுவனங்களுக்கு இதுவரை ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வர உள்ளதாகவும், நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

Also Read: உலக முதலீட்டாளர்கள் மாநாடு : திமுக ஆட்சியில் உலகின் தலைசிறந்த மாநிலமாக உயரும் தமிழ்நாடு.. முரசொலி !