India

“பிரியாணி நல்லாவே இல்ல...” : பணத்தை திரும்ப கேட்ட வாடிக்கையாளரை தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள் !

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்றைய முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மக்கள் பலரும் ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் நண்பர்கள், குடும்பத்தினரோடு புத்தாண்டை கொண்டாடினர். அந்த வகையில் 5 - 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று ஐதராபாத்தில் அமைந்துள்ள அபிட்ஸ் என்ற பகுதியிலுள்ள கிராண்ட் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர்.

அப்போதே அங்கே இருக்கையில் அமர்ந்த அவர்கள், தேவையான உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். அந்த சமயத்தில் பிரியாணியையும் ஆர்டர் செய்துள்ளனர். அதனை வாங்கி சாப்பிட்ட அந்த குடும்பம் சரியில்லை என்று கூறி, வேறு பிரியாணி கேட்டுள்ளனர். ஆனால் ஊழியர்கள் அதையே மறுபடியும் சூடாக்கி கொடுத்ததாகவும், இதனால் அதை மட்டும் அவர்கள் சாப்பிடாமல் வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சாப்பிட்ட பின்னர் பில் கொடுக்க சென்றபோது, பிரியாணிக்கு மட்டும் பணம் கொடுக்க முடியாது என்று கூறவே, ஹோட்டல் ஊழியர்களுக்கும் அந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஓஊழியர்கள், அந்த நபரை மோசமாக பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில் இது கைகலப்பாக மாறியுள்ளது.

ஊழியர்கள், அந்த குடும்பத்தினரை குச்சியால் தாக்கியுள்ளனர். மேலும் அருகில் இருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை கொண்டு அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து வீடியோ எடுக்கப்பட்டதோடு போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், சண்டையை விலக்கினர்.

மேலும் இது தொடர்பாக ஹோட்டல் ஊழியர்கள் 10 பேரை கைது செய்ததோடு, ஹோட்டலையும் மூடினர். தொடர்ந்து ஊழியர்கள் மீது 324, 506, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்களை பெற்று வருகிறது.

Also Read: ஜப்பானில் ஒரே நாளில் 155 முறை நிலநடுக்கம்... தரைமட்டமான கட்டடங்கள்... 8 பேர் பலியான சோகம் !