India

பாலம், இரயில் இன்ஜினை தொடர்ந்து காணாமல் போன குளம்.. ஒரே இரவில் குளத்தில் குடிசை அமைத்த கும்பலால் ஷாக் !

பீகாரில் அமைந்துள்ளது தர்பங்கா என்ற நகர். இங்கு பொதுமக்கள் பலரும் வசித்து வரும் நிலையில், இந்த பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு குளம் ஒன்று இருந்து வந்துள்ளது. ‘நீம் போஹார்’ என்ற பெயர் கொண்ட அந்த குளத்தை பல ஆண்டுக்காக மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த சூழலில் தற்போது அந்த குளமே காணாமல் போயுள்ளது.

மீன் பிடி உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டில் இருந்த அந்த குளத்தை மர்ம நபர்கள் சில நாட்களாக குறிவைத்து வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவு நேரங்களில் லாரி, மிஷின் உள்ளிட்ட சத்தம் கேட்பதாகவும், இதனால் சந்தேகம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் அதனை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து 10 - 15 நாட்களாக இரவோடு இரவாக மணல் திருடி சென்றுள்ளனர் அந்த கும்பல். அதோடு குளத்தில் இருக்கும் தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றிய அந்த கும்பல், அதில் குடிசை ஒன்றையும் அமைத்திருக்கிறது. மறுநாள் காலை அப்பகுதி மக்கள் வந்து பார்க்கையில் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்க்கையில், அங்கே குளம் இருந்ததற்கான தடயம் எதுவும் இல்லை. அதோடு அந்த இடத்தில் சின்னதாக குடிசை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த செயலில் ஈடுபட்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு ரோஹ்தாஸ் என்ற பகுதியில் இருந்த 60 அடி பாலம் திருடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், 8 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பேகுசராய் பகுதியில் இரயில் இன்ஜின் திருடப்பட்ட சம்பவமும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்பங்கா பகுதியில் நீர் வளம் நிறைந்து காணப்பட்டாலும், அண்மைக்காலமாக அங்கே தண்ணீர் பற்றாக்குறை உருவாகியுள்ளது. அதோடு குடிநீர் வசதியும் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அங்கே சுமார் 300 குளங்கள் இருந்த நிலையில், 2020-ல் 84 ஆக குறைக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

Also Read: பாலியல் அத்துமீறல்... கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் தள்ளிவிட்ட கொடூரர்கள் - உ.பி தொடரும் அதிர்ச்சி !