India

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட IIT மாணவி... 3 பாஜக நிர்வாகிகள் கைது.. 2 மாதங்கள் கழித்து நடவடிக்கை!

பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் அதிகளவில் பாஜகவினர் ஈடுபடுவதாக குற்றசாட்டுகள் எழுந்த வண்ணமாக இருக்கிறது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் பாஜக ஆளும் மாநிலங்கள் நடப்பதால் இதனை மூடி மறைக்கப்படுவதாக எதிர்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ஐஐடி இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக 2 மாதம் கழித்து குற்றவாளிகளான பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. இங்கு அமைந்திருக்கும் வாரணாசியில் 'பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம்' என்ற ஐஐடி கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருந்து பல மாணவ - மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். அந்த வகையில் இங்கு 22 வயது இளம்பெண் ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்த சூழலில் கடந்த நவம்பர் 1-ம் தேதி இரவு தனது நண்பரை பார்க்க விடுதியில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் அந்த பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரை இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து மிரட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

2 மாதங்களாக மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து குணால் பாண்டே, ஆனந்த் (எ) அபிஷேக் சௌகான், சக்‌ஷாம் படேல் ஆகிய 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் பாஜக நிர்வாகிகள் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் எதிர்க்கட்சிகள் என பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் தொடர் போராட்டத்துக்கு பிறகு குற்றச்செயலில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: பாலியல் குற்றவாளியை பாதுகாக்கும் பாஜக அரசு: அர்ஜுனா விருதை நடுரோட்டில் வைத்து சென்ற மல்யுத்த வீராங்கனை !