India
“கருணை மனு இல்லை.. அரசியல் அமைப்பிற்கு முரணான விதிகள்” : 3 புதிய குற்றவியல் சட்டங்கள் சொல்வது என்ன ?
பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் பாஜக, தனது தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் தத்துவார்த்த கொள்கைகளை எப்படியாவது அமல்படுத்தி இந்தியாவை இந்து ராஷ்டிர நாடாக மாற்ற முயற்சிக்கிறது. கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக சிஏஏ உள்ளிட்ட சட்டங்களை கொண்டுவர முயன்றது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து என பல முணைகளில் சிறுபான்மையினர் விரோத நடவடிக்கையில் இறங்கியது.
அந்தவகையில் தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்தியக் குற்றவியல் சட்டத்தை மாற்றியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. இந்த சட்டம் முழுக்க முழுக்க குழந்தைகள், பெண்கள், தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதனால்தான் இத்தகைய சட்டம் நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் வரும்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து, புதிய சட்ட மசோதாவை ஆளும் கட்சியின் பெரும்பான்மை பலத்தை வைத்து நிறைவேற்றியிருக்கிறார்கள்.
அதாவது சட்டமேதை அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தில் ஆளும் ஒன்றிய அரசுக்கு இருக்கும் பாதக அம்சத்தை நீக்கி, சாதகமாக்க முயற்சிக்கும் சதியே இந்த சட்டம். இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குடிமைத் தற்காப்புச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் உள்ளிட்ட சட்டத்தில் மாற்றம் செய்து புதிய சட்டங்களை கொண்டுவந்தள்ளது மோடி அரசு.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இரண்டு நபர்கள் உள்ளே புகுந்து புகை குண்டுகளை வீசி அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக ஆனதை சுட்டிக்காட்டி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போர்க்கொடி தூக்கினர். மேலும் உண்மை சம்பவம் என்ன நடந்தது என்பதை இந்திய மக்களுக்கு தெரியப்படுத்தும் பணிகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இறங்கினர்.
அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளித்து பதில் அளிக்க வேண்டிய ஒன்றிய அரசு, கேள்வி எழுப்பியவர்கள், உண்மை சம்பவத்தை அம்பலப்பத்தியவர்கள் என 146 எதிர்க்கட்சி எம்.பி.க்களை கூண்டோடு சஸ்பெண்ட் செய்தது. இது இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளிடையே பெரும் பேசுபொருளான நிலையில், இதனை எதுவும் பொருட்படுத்தாமலும், உரிய விளக்கமும் இல்லாமல் புதிய மசோதாக்களை நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.
இந்த சட்டங்கள் என்ன? அது சொல்வது என்ன ?
இந்தியக் குற்றவியல் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி) இந்தியச் சாட்சிகள் சட்டம் (ஐ.இ.சி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, ‘பாரதிய நியாய சன்ஹிதா’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா’, ‘பாரதிய சாட்சிய அதினியம்’ ஆகிய 3 புதிய மசோதாக்கள் மூலம் சட்டத்தில் சில திருந்தங்களை கொண்டுவந்துள்ளது ஒன்றிய அரசு.
இந்த சட்டங்களில் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுகிறது.
இந்த புதிய சட்டங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான சரத்துகள் ஒரே மாதிரியான விதியை கொண்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் போன்ற சிறப்பு சட்டங்களில் இருந்த பயங்கரவாத செயல்கள், இப்போது இந்திய நீதித்துறை சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதேபோல், பிக்பாக்கெட் போன்ற சிறிய குற்றங்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கையாள்வதற்கான விதிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை முன்னர் மாநில அரசால் இயற்றப்பட்ட சொந்த சட்டங்கள் கீழ் இருந்தது.
கும்பல் படுகொலைகளில் ஈடுபடும் குற்றவாளி ஒவ்வொருவருக்கும் தலா ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
தவறான திருமண வாக்குறுதியின் கீழ் உடலுறவு கொள்வதும் ஒரு முக்கிய குற்றமாக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொழில் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான வழக்கு நீக்கப்பட்டுள்ளது.
முன்பு குற்றம்சாட்டப்பட்டவரை காவல்துறை விசாரிக்கும் கால அவகாசம் 15 நாட்கள் வரை இருந்த நீதிமன்றக் காவல் தற்போது 60 முதல் 90 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். புகார் அளித்த 3 நாட்களுக்குள் முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்ய வேண்டும்.
மரண தண்டனை கைதிகளுக்கு மட்டுமே கருணை மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனநாயக அமைப்பின் தலைவர்களுக்கு கருணை மனு தாக்கல் செய்ய அனுமதி இருந்தது.
இந்த புதிய சட்டங்கள் காவல்துறைக்கு இருக்கும் அதிகாரத்தை மேலும் அதிகரித்திருக்கிறது என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுபோன்ற இன்னும் ஏராளமான சரத்துகள் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "புதிய மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய இந்தியத் தண்டனை சட்டம் கொடூரமானது. ஏழை உழைக்கும் வர்கத்திற்கு நலித்த பிரிவினருக்கு எதிராக இந்த சட்டத்தை கருவியாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
மேலும் பெரும்பாலான கைதிகள் அதாவது விசாரணைக்கு கீழ் உள்ளவர்கள் ஏழை மற்றும் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த புதிய சட்டம் அரசியல் அமைப்பிற்கு முரணாக அதன் விதியை மீறுவதாக உள்ளது.
இந்த சட்டத்தால் ஏழைக்கள் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள்தான் பெரிதும் பாதிக்க நேரிடும். அதன் பாதிப்பை இவர்கள் மட்டுமே சுமக்க நேரிடும். மேலும் இதில், 'சுதந்திரம்' (freedom) மற்றும் 'தனிப்பட்ட சுதந்திரம்' (personal liberty) ஆகியவற்றைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் பல விதிகள் இருக்கிறது.” எனத் தெரிவித்திருக்கிறார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!