India
"ஹிஜாப் தடை ரத்து - தாங்கள் விரும்பும் ஆடைகளை அணியலாம்" : கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு!
ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்தே நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த அடக்குமுறை மிகவும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகத்திலும் இந்த அடக்குமுறை நிகழ்ந்தது.
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு வரை பாஜக ஆட்சியிலிருந்து வந்தது. அப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக சில தாக்குதல்கள் பிரசாரங்கள் நிகழ்ந்தது. அதில் முக்கியமானவையாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பியு என்ற கல்லூரியில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் வரக்கூடாது என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. இதற்கு அந்த கல்லூரி ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவிக்காமல், மாணவிகளை ஹிஜாபை கழற்ற வற்புறுத்தினர்.
தொடர்ந்து இந்த நிகழ்வுக்கு அம்மாநிலம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிராக இந்துத்வ கும்பல் சேர்ந்து மேலும் போராட்டம் நடத்தினர். மேலும் இந்த நிகழ்வுக்கு உலக நாடுகள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியது. இந்த விவகாரம் பூதாகரமான ஆன நிலையில், ‘மத அடையாளமான’ ஹிஜாப்பை அனுமதிக்க முடியாது என கர்நாடகா பா.ஜ.க அரசு பிடிவாதமாக உத்தரவிட்டது.
இந்த தடையை நீக்கக்கோரி முஸ்லிம் மாணவிகள் சிலர் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், அரசுப் பள்ளிகளில் சீருடையைப் பின்பற்ற வேண்டும் என்றும் மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்றும் கூறி மாணவிகளின் வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஹிஜாப் தடை ரத்து செய்யப்படும் என அறிவித்தது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் தடை எதுவும் இல்லை என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் மைசூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் சித்தராமையா, :"கர்நாடகாவில் பெண்கள் தங்கள் விரும்பும் ஆடைகளை அணியலாம். ஹிஜாப் தடை இனி இல்லை. ஹிஜாப் அணிந்து எங்கு வேண்டுமானாலும் பெண்கள் செல்லலாம். நீங்கள் எப்படி உடுத்துகிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். நான் ஏன் உங்களைத் தடுக்க வேண்டும்?.
உனக்கு விருப்பமானதை உடுத்து. உனக்கு விருப்பமானதைச் சாப்பிடு. நான் விரும்புவதைச் நான் சாப்பிடுவேன், நீ விரும்புவதை நீ சாப்பிடு. நான் வேட்டி அணிகிறேன், நீ பேன்ட் சட்டை அணி. அதில் என்ன தவறு? என கூறியுள்ளார்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!