India

புதிய தொலைத்தொடர்பு மசோதாவில் உள்ள ஆபத்து என்ன? : தனிநபர்களின் தகவல்களை திருட பார்க்கும் ஒன்றிய அரசு!

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது அவசர சூழல் போன்ற காரணங்களுக்காக, 'மொபைல்போன் நெட்வொர்க்' உட்பட தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை, ஒன்றிய அரசு தற்காலிகமாக தன்வசப்படுத்திக் கொள்ளும் வகையில், புதிய தொலைத்தொடர்பு மசோதா, நேற்று மக்களவையில் தாக்கலானது. இந்திய தந்தி சட்டம், இந்திய கம்பியில்லா தந்தி சட்டம் போன்ற பழைய சட்டங்களுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட்ப காலத்துக்கேற்ப, தொலைத் தொடர்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புகை குண்டுவீச்சு விவகாரம் தொடர்பான அமளிக்கு இடையே இந்த மசோதாவை, ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார். பொதுமக்கள் பாதுகாப்பு, அவசர நிலை, பேரிடர் நிர்வாகம், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக, மொபைல்போன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நெட்வொர்க்கை, ஒன்றிய அரசு அல்லது மாநில அரசு அல்லது அரசுகளால் நியமிக்கப்படும் அதிகாரிகள் கையகப்படுத்த இந்த மசோதா வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, அச்சுறுத்தலாக உள்ள தகவல் பரிமாற்றங்களை தடுத்து நிறுத்துவது, தொலைத் தொடர்பு சேவையை துண்டிப்பது போன்ற அதிகாரமும் அரசுக்கு வழங்கப்படுகிறது. இதன்படி, தனிநபர்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகளையும் ஒன்றிய அரசு தலையிட்டு எடுத்து கொள்ள முடியும். ஒன்றிய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள், பணி நிமித்தமாக அனுப்பும் செய்திகளில் அரசுகள் தலையிடாது. அதே நேரத்தில் தேசிய பாதுகாப்பை மீறுவதாக இருந்தால் மட்டும் அதில் அரசுகள் குறுக்கிட முடியும்.

தொலைபேசியை சட்டவிரோதமாக ஒட்டுகேட்போருக்கு மூன்று ஆண்டுகள் சிறை, 2 கோடி ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இந்த புதிய சட்டத்தின்படி, தொலைத் தொடர்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் அமைப்பும், ஆணையமும் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட பின், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும், அவரது ஒப்புதலுக்கு பின் நடைமுறைக்கு வரும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த மசோதா நிதி மசோதாவாக கொண்டு வரப்பட்டதாலும், இதற்கு மாநிலங்களவையில் ஒப்புதல் பெற வேண்டியதில்லை என்பதாலும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மசோதாவில் தன்மறைப்பு சார்ந்த பிரச்சனைகள் இருப்பதாகவும், எனவே, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Also Read: நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் : “பா.ஜ.க. உறுப்பினர்களும் பீதியில் இருக்கிறார்கள்” - முரசொலி !