India

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய கும்பலுடன் பா.ஜ.க MPக்கு தொடர்பு? : யார் இந்த பிரதாப் சிம்ஹா?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம் போல் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. அப்போது அப்போது மக்களவையில் எம்.பிக்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென பார்வையாளர்கள் மாடத்திலிருந்து பெண் உட்பட 2 மர்ம நபர்கள் அரங்கிற்குள் குதித்தனர். அவர்கள் புகை குண்டுகளை அவைக்குள் வீசினர்.

இதனை கண்டு எம்.பி.-க்கள் பதறினர். அதோடு மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது ஒருவர் மேஜை மீது குதித்து ஓடினார். பிறகு இருவரையும் எம்.பிக்கள் பிடித்து அங்கிருந்த பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் சஹார் சர்மா, மனோரஞ்சன் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுடன் இருந்த பெண் நீலம் என்றும் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாகவும் அவர் போலிஸாரிடம் கூறியுள்ளார். அதோடு இவர்கள் சர்வாதிகாரம் ஒழிக, பாரத் மாதா கி ஜே என முழக்கங்களை எழுப்பியுள்ளனர். புதிய நாடாளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நடந்த உடனே மைசூரில் உள்ள மனோரஞ்சன் என்பவர் வீட்டில் விஜயநகர் போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போதுதான் மைசூர் மக்களவையின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் அனுமதிச்சீட்டைப் பெற்று நாடாளுமன்றத்திற்குள் இவர்கள் நுழைந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த சம்பவத்திற்கும் பா.ஜ.க எம்.பிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

யார் இந்த பிரதாப் சிம்ஹா?

பத்திரிகையாளராக இருந்த பிரதாப் சிம்ஹா 2008ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து ஒரு புத்தகத்தை வெளியிட்டார். பிறகு 2014ம் ஆண்டு பா.ஜ.கவில் இணைந்தார். உடனே அவருக்கு பா.ஜ.க தலைமை இளைஞர் பிரிவு தலைவர் பதவியை வழங்கியது.

பின்னர் 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மைசூர் தொகுதியில் போட்டியிட்டு 3200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சிம்ஹாவின் தற்போதைய சொத்து: ரூ.1,87,23,762, மொத்த கடன்கள்: ரூ.65,86,698 என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்நிலையில்தான் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பார்வையாளர்களுக்கான அனுமதிச்சீட்டு வழங்கிய சர்ச்சையில் பிரதாப் சிம்ஹா சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மக்களவையில் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசி தாக்குதல் : நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் என்ன?