India

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் யார்?- எப்படி அவைக்குள் வந்தனர்?: வெளியான அதிர்ச்சி தகவல்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம் போல் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. அப்போது அப்போது மக்களவையில் எம்.பிக்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென பார்வையாளர்கள் மாடத்திலிருந்து பெண் உட்பட 2 மர்ம நபர்கள் அரங்கிற்குள் குதித்தனர். அவர்கள் புகை குண்டுகளை அவைக்குள் வீசினர்.

இதனை கண்டு எம்.பி.-க்கள் பதறினர். அதோடு மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது ஒருவர் மேஜை மீது குதித்து ஓடினார். பிறகு இருவரையும் எம்.பிக்கள் பிடித்து அங்கிருந்த பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். புதிய நாடாளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் சஹார் சர்மா, மனோரஞ்சன் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுடன் இருந்த பெண் நீலம் என்றும் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாகவும் அவர் போலிஸாரிடம் கூறியுள்ளார். அதோடு இவர்கள் சர்வாதிகாரம் ஒழிக, பாரத் மாதா கி ஜே என முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த உடனே மைசூரில் உள்ள மனோரஞ்சன் என்பவர் வீட்டில் விஜயநகர் போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போதுதான் மைசூர் மக்களவையின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் அனுமதிச்சீட்டைப் பெற்று நாடாளுமன்றத்திற்குள் இவர்கள் நுழைந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த சம்பவத்திற்கும் பா.ஜ.க எம்.பிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தாக்குதல் நடத்திய மனோரஞ்சன் தந்தை ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டி கொடுத்துள்ளார். அதில், "நான்கு நாட்களுக்கு முன்பு தனது மகன் பெங்களூரு செல்வதாக்கச் சொல்லிவிட்டுச் சென்றான். ஆனால் அவன் டெல்லியில் இருப்பது எனக்குத் தெரியாது. கல்லூரி படிக்கும் போது மாணவர் சங்க தலைவராக இருந்தான். நிறையப் புத்தகங்களைப் படிப்பான். குறிப்பாக விவேகானந்தரின் புத்தகங்களைப் படிப்பான். ஆனால் அவனுடைய அரசியல் சார்பு எனக்கு தெரியாது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”நாடாளுமன்றத்திற்கே மிகப் பெரிய அச்சுறுத்தல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!