India

மக்களவையில் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசி தாக்குதல் : நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் என்ன?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம் போல் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. அப்போது அப்போது மக்களவையில் எம்.பிக்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென பார்வையாளர்கள் மாடத்திலிருந்து பெண் உட்பட 2 மர்ம நபர்கள் அரங்கிற்குள் குதித்தனர். அவர்கள் புகை குண்டுகளை அவைக்குள் வீசினர்.

இதனை கண்டு எம்.பி.-க்கள் பதறினர். அதோடு மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது ஒருவர் மேஜை மீது குதித்து ஓடினார். பிறகு இருவரையும் எம்.பிக்கள் பிடித்து அங்கிருந்த பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் சஹார் சர்மா, மனோரஞ்சன் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுடன் இருந்த பெண் நீலம் என்றும் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாகவும் அவர் போலிஸாரிடம் கூறியுள்ளார். அதோடு இவர்கள் சர்வாதிகாரம் ஒழிக, பாரத் மாதா கி ஜே என முழக்கங்களை எழுப்பியுள்ளனர். புதிய நாடாளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்:-

நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழையும் எவரும் அடையாள அட்டை காண்பிக்க வேண்டும். பார்வையாளராக கூட்டத்தை பார்க்க ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி. அதற்கு Visitor Pass பெற வேண்டும்.

Visitor Pass பெற நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற அதிகாரியின் பரிந்துரைக் கடிதம் வேண்டும். நாடாளுமன்றக் கட்டட நுழைவாயில்களில் நுழையும் அதிகாரிகளும் அலுவலர்களும் மெட்டல் டிடெக்டர் பரிசோதனையை தாண்டிதான் செல்ல வேண்டும்.

பார்வையாளர்களின் பகுதிக்கு செல்வதற்கு முன் எல்லா பார்வையாளர்களுமே மெட்டல் டிடெக்டர் பரிசோதனையை தாண்டிதான் செல்ல வேண்டும்.

குச்சிகள், குடைகள், சூட்கேஸ்கள், கைப்பைகள், புகைப்பிடிக்கும் பொருட்கள், புத்தகங்கள், போஸ்டர்கள் போன்றவற்றை பார்வையாளர்கள் கொண்டு வர அனுமதியில்லை. செல்பேசி, பேஜர் போன்றவற்றை கொண்டு செல்லவும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

இவை எல்லாவற்றையும் மீறி நாடாளுமன்றத்துக்குள் புகைக் குண்டுகளை போன்ற ஆபத்தான பொருட்களை மர்ம நபர்கள் வீசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”நாடாளுமன்றத்திற்கே மிகப் பெரிய அச்சுறுத்தல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!