India

”வரலாற்றை மாற்றி எழுதும் பழக்கம் கொண்டவர் அமித் ஷா” : நேரு மீதான அவதூறுக்கு ராகுல் காந்தி பதிலடி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று திங்களன்று ஜம்மு - காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.

அப்போது இந்த மசோதாக்கள் மீது பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நேருவால்தான் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது தாமதமானது"என பேசினார். இதற்கு அவையிலிருந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, " ஜவஹர்லால் நேரு இந்தியாவுக்காக தனது உயிரைக் கொடுத்தார். அவர் பல ஆண்டுகளாக சிறையிலிருந்தார். அமித் ஷாவுக்கு இந்த வரலாறு தெரியாது. அவர் வரலாற்றை அறிந்திருப்பார் என்று நான் எதிர்பார்க்க முடியாது. வரலாற்றை அவர் அதை மாற்றி எழுதும் பழக்கம் கொண்டவர்.

நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதை திசை திருப்பவே ஜவஹர்லால் நேரு குறித்து அமித் ஷா விமர்சித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் அவர்களுக்கு அச்சம் இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.

Also Read: டிஜிட்டல் லாக்கரில் இருக்கும் தகவல்கள் எந்தளவுக்கு பாதுகாப்பானவை?: ஒன்றிய அரசுக்கு கனிமொழி சோமு கேள்வி!