India

"பாசிச பா.ஜ.கவை வீழ்த்தி இந்திய நாட்டை காப்பாற்றுவோம்" : கேரளாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனல் பேச்சு!

கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் இலக்கிய விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:-

இலக்கியம், எழுத்தாளர்கள், கலை மற்றும் கலைஞர்களைக் கொண்டாடுவதில் கேரளா எப்போதும் முன்னணியில் உள்ளது என்பதை நான் அறிவேன்.

போலிச் செய்திகளை எதிர்த்துப் போராடுவது நமக்கு முக்கியமான பொறுப்பு. சமீபத்தில், ஒரு மாநாட்டில், சாதி பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து பேசினேன். மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக எனது அறிக்கையை பாஜக தவறாக திரித்து பொய்யாக பரப்பியது. அந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக நின்று ஆதரவளித்த கேரள மக்களுக்கு நன்றி.

நான் திமுக அரசை பிரதிநிதித்துவப்படுத்துவதால். திராவிட இயக்கமும் இலக்கியமும் என்ற தலைப்பில் பேச விரும்புகிறேன். அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு இது எனது முதல் இலக்கிய விழா. இதற்கு முன்பு சென்னை புத்தக காட்சியில் நிறைய முறை பங்கேற்றுள்ளேன். உரையாற்றியிருக்கிறேன்.

உங்களில் பலரும் கூட Chennai book Fair-ல் பங்கேற்றிருப்பீர்கள். அதே விதமான உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இங்கே இருக்கிறேன். உண்மையில், அதை உங்கள் ஊர் என்று அழைத்து என்னைத் தூர விலக்கிக் கொள்ள விரும்பவில்லை. இது நம்ம ஊர். தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் உள்ள ஒற்றுமை அப்படி.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக கேரளாவைச் சேர்ந்த தலைவர்கள் தமிழகத்திலும் வீதியில் இறங்கினர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடியான நீதிக்கட்சியின் ஸ்தாபகத் தந்தைகளில் ஒருவரான டாக்டர் டி எம் நாயர் அத்தகைய ஒரு தலைவர். அதேபோல் தந்தை பெரியார் வந்து வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நுழைவு உரிமை கோரி போராட்டம் நடத்தினார்.

பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். பெரியாரின் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவுக்கு கூட நமது முதல்வர் கேரளா சென்றிருந்தார். பெரியாரின் வைக்கம் எதிர்ப்பு - கன்னட மொழியில் ஒரு புத்தகம் இன்று நமது மாண்புமிகு முதல்வர் அவர்களால் வெளியிடப்பட்டது. பெரியார் காலத்திலிருந்தே திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் கேரளாவுக்கும் இடையே ஒரு பெரிய தொடர்பு இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோர் திராவிட இயக்கத்தை தங்கள் எழுத்துக்களின் மூலம் வடிவமைத்தவர்கள். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் மட்டுமே 100-க்கும் அதிகமான இதழ்களை நடத்தினார்கள். முடிவெட்டும் கடைகள் – டீ கடைகளை படிப்பகம் ஆக்கினார்கள்.

நாங்கள் இந்திக்கோ, எந்த மொழிக்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால், கட்டாயப்படுத்தி படிக்க வேண்டும் என்று சொல்லும் போது – அந்த பாசிச மனநிலையைத் தான் அன்றைக்கு எதிர்கொள்வோம். ஒன்றிய அரசால், இன்றைக்கும் எதிர்க்கிறோம்.

நாடு முழுவதும் உள்ள தனது அரசியல் எதிரிகளை வேட்டையாட சுதந்திரமான புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது. பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் நிர்வாகத்தை சீரழிக்க கவர்னர்களை அனுப்புகிறது மத்திய அரசு. தமிழக ஆளுநரின் செயல்பாடு ஒரு உதாரணம்.

மிக சமீபத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பில் வளர்ச்சியைத் தடுக்க மற்றொரு மூர்க்கத்தனமான பிற்போக்கு நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம், தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள். மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொரு 10 லட்சம் மக்களுக்கும் 100 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற விகிதத்தைப் பின்பற்ற வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. இதனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் பாதிக்கப்படும்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முழுமையான தோல்வியைச் சந்தித்தது. இந்த இரண்டு மாநிலங்களிலும் அவர்களால் ஒரு இடத்தைக் கூட எடுக்க முடியவில்லை.

நமது மக்கள் எப்படி முற்போக்கு மற்றும் இந்த பிரிவினை சக்திகளுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதைக் காட்ட இது ஒரு சான்று. 2024 மக்களவைத் தேர்தல் நெருங்குகிறது. பாசிஸ்டுகளுக்கு கசப்பான சிகிச்சையை மீண்டும் செய்ய வேண்டும். நமது இந்திய யூனியனையும் நமது மாநிலங்களையும் காப்பாற்ற பாசிச பாஜகவை வீழ்த்துவது நமது பொறுப்பு.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Also Read: அனைத்தையும் உடைக்கும் ஒரே ஆயுதம் சமூகநீதி : முதலமைச்சரின் மேற்கோளை சுட்டிக்காட்டும் முரசொலி தலையங்கம்!