India

“கோயில்கள் சத்தத்தை என்னவென்று கூறுவது?” - ஒலி மாசு குறித்த வழக்குக்கு குட்டு வைத்த குஜராத் நீதிமன்றம் !

நாடு முழுவதும் அனைத்து இஸ்லாமிய ஆலயங்களிலும் நாள்தோறும் தொழுகை நடைபெறுவது வழக்கம். அவ்வாறு தொழுகை நடைபெறும்போது, இஸ்லாமிய ஆலயத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் ஒளிபரப்பப்படும். இந்த சூழலில் இந்த தொழுகையால் ஒலி மாசு (Noise Pollution) ஏற்படுவதாக பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது.

குஜராத்தின் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த சக்திசின் ஸாலா (Shaktisinh Zala) என்பவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில் இஸ்லாமிய கோயில்களில் தொழுகை ஒலிபரப்பு செய்யப்படுவதால், ஒலி மாசு ஏற்படுவதாகவும், எனவே அதனை ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் (Sunita Agarwal) முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுநல வழக்கு விசாரிக்கப்பட்டது. இதையடுத்து இது போன்ற தேவையற்ற வழக்கை ஊக்குவிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், கோயில்களில் பண்டிதர்கள் அதிகாலை 3 மணி முதலே பூஜை உள்ளிட்டவையை தொடங்குகின்றனர். மணி, பஜனை, பக்தி பாடல்கள் உள்ளிட்டவை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒலி மாசு ஏற்படவில்லையா? என்று கேள்வி கேட்ட நீதிபதி, 5-10 நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும் தொழுகையினால் ஒலி மாசு ஏற்படுகிறதா என்று வழக்கை தொடுத்தவருக்கு கேள்விகளால் நீதிபதி குட்டு வைத்தார்.

Gujarat High Court

அதோடு எத்தனை நிமிடங்களுக்கு தொழுகை செல்கிறது? 5 நிமிடங்களுக்குக் குறையாமல், ஒலி மாசுபாடு பற்றிய அறிவியல் முறை தொடர்பான டெசிபல்களைக் காட்டுங்கள். தொழில்நுட்ப ரீதியாக எத்தனை ஈசிபல் சத்தம் தொழுகை சத்தத்தால் ஏற்படுகிறது? என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பினார். ஆனால் இவை எதற்கும் மனுதாரர் தப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து ஒலி மாசு ஏற்படுவதாக கூறி தொடுக்கப்பட்ட வழக்கில், முறையான ஆதாரங்கள் எதுவுமில்லை என்பதாலும், இது காலகாலமாக நடக்கும் ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதாலும், இது போன்ற வழக்குகளை ஊக்குவிக்க முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி சுனிதா அகர்வால்.

Also Read: 17 நாட்கள் : சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் சொன்ன திகில் அனுபவம்!