India

”எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்” : ஒன்றிய அரசுக்கும் EDக்கும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஒன்றிய பா.ஜ.க அரசு, எதிர்க்கட்சிகளின் ஆட்சியைக் கவிழ்க்க பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டி வருகிறது. இந்த திட்டத்திற்காக அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை ஏவி எதிர்க்கட்சி அமைச்சர்களைக் கைது செய்து மிரட்டி வருகிறது.

டெல்லியில் மணீஷ் சிசோடியா, தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜி என அமைச்சர்களைக் கைது செய்து விசாரணை என்ற பெயரில் ஒன்றிய அரசு கொடுமைப் படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் இந்த அராஜக போக்கிற்கு இந்தியா கூட்டணியின் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் உச்சநீதிமன்றத்திலும் அமலாக்கத்துறைக்கு எதிராக வழக்கு விசாரணைகள் நடந்து வருகிறது. இந்த வகையில், ஒருவரை கைதுசெய்யும் போதும், விசாரணை நடத்தும் போதும் எதற்காக விசாரணை என்பதைத் தெரிவிக்க மறுப்பது அடிப்படை சட்ட நீதிக்கு எதிரானது என கூறி அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல், 'அரசு தரப்புக்கு வாதிட போதிய அவகாசம் வழங்க வேண்டும்' என்று தெரிவித்தார். இதற்கு மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோர், 'சொலிசிட்டர் ஜெனரல் 19 வது முறையாக இந்த பிரச்சனையை எழுப்புகிறார்' என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் வழக்கின் வாதங்களைக் கேட்டனர். பின்னர் ஒன்றிய அரசு தனது வாதங்களைத் தொடங்க மீண்டும் மீண்டும் அவகாசம் கோரியது. பிறகு வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு மனுதாரர்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் மூத்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார் என்பதால் வழக்கை வேறு நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றத் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து வழக்கை ஒத்திவைத்தார். மேலும் ஒன்றிய அரசின் சொலிசிட்டரிடம், பலவற்றை பார்கிறோம், கேட்கிறோம். ஆனால் பலவற்றைப் பேசுவதில்லை என எச்சரிக்கும் விதமாகக் கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தார்.

Also Read: மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம் - 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டம் : அசத்தும் TN CM!