India

ராஷ்மிகா, கத்ரீனா, கஜோல்.. அடுத்தது? - AI-ஐ பயன்படுத்தி மர்ம நபர்கள் செய்யும் அட்டூழியம் -போலிஸ் விசாரணை!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீட்டோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதிலிருந்து இணைய உலகம் செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் Artificial Intelligence-ஐ பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, ஒடிசா செய்தி தொலைக்காட்சி ஒன்று சாதனை படைத்தது.

இப்படி AI தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சில இடங்களில் பண மோசடி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் நடந்து வருகிறது. AI குறித்து தற்போது வரை விவாதமாக பேசப்பட்டு வரும் நிலையில், அண்மைக்காலமாக இதனை சிலர் தவறாக பயன்படுத்துவதை நம்மால் காண முடிகிறது.

கடந்த 2 வாரம் முன்னர் கூட நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த ஒரு டீப் ஃபேக் வீடியோ ஒன்று வைரலானது. ஆரம்பத்தில் பலரும் இதனை உண்மை என நினைத்த போது, அது போலி என்று தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவத்துக்கு ராஷ்மிகாவும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். வேறொரு பெண்ணின் வீடியோவோடு, இவரது முகத்தை வைத்து மாற்றி அதில் இடம்பெற்றிந்தது.

இது போன்ற விஷயங்கள் தனது பள்ளி பருவத்தில் தனக்கு நேர்ந்தால், எப்படி அதனை சந்தித்திருப்பேன் என்றும் உருக்கமாக வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்த இந்த சம்பவத்துக்கு நடிகர், நடிகைகள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், ஒன்றிய அரசும் இதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தது. அதோடு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் குறித்த Deepfake Video ஒன்றும் வைரலானது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது நடிகை கஜோல் ஆடை மாற்றுவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வேறொரு பெண்ணின் வீடியோவை இவரது முகத்தை பதித்து அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இது தற்போது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

மனித வளர்ச்சிக்காக கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பம் இதுபோல் சிலர் கைக்கு கிடைத்தால், இதுபோன்ற தவறான வேலைகளில் ஈடுபடுகின்றனர். உலகம் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்வை தடுக்க அந்தந்த நாட்டு அரசு விரைவில் சட்டவிதிகள் வகுத்து காட்டுக்குள் வைக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: AI DEEPFAKE VIDEO - போலி வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை : ஒன்றிய அரசு எச்சரிக்கை!