India

கேரளாவை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிக்கு குழந்தைகள் தினத்தில் அதிரடி தீர்ப்பு !

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அமைந்துள்ளது ஆலுவா. இங்கு புலம்பெயர் தொழிலாளிகள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். அதில் சிலர், தங்கள் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அந்த வகையில் பீகாரை சேர்ந்த தம்பதி ஒன்று, வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 1 மகன், 3 மகள்கள் இருக்கும் நிலையில், அதில் 5 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார்.

இந்த சூழலில் கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி, இந்த தம்பதி வழக்கம்போல் வேலைக்கு சென்று மாலை நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது தனது மகள் வீட்டுக்கு இன்னும் வரவில்லை என்பதை அறிந்து அவர்கள் பெரும் பதற்றமடைந்தனர். அந்த பகுதி முழுவதும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்பதால், உடனே இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடினர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அதில் வாலிபர் ஒருவர் அந்த சிறுமியை அழைத்து சென்றது பதிவாகியிருந்தது. அதன்பேரில் அவர் யார் என்று விசாரிக்கையில், அந்த நபரும் பீகாரைச் சேர்ந்த அஸ்பாக் ஆலம் அஸம் எனத் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை தீவிரமாகி தேடி பிடித்து கைது செய்து விசாரிக்கையில், தனக்கும் அதற்கும் சம்மந்திமில்லை என்று முரண்டு பிடித்துள்ளார். பின்னர் சிசிடிவி காட்சியை காண்பித்து விசாரிக்கையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஆலம், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொன்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்தார். மேலும் சிறுமியின் சடலம் இருக்கும் இடத்தையும் போலீசாரிடம் தெரிவித்தார்.

பின்னர், ஆலுவா மார்க்கெட் அருகேயுள்ள குப்பைக்கிடங்கில் சாக்குமூட்டையில் காட்டப்பட்டு தூக்கி வீசப்பட்டிருந்த சிறுமியின் உடலை மீட்ட போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். அப்போது சிறுமியின் அந்தரங்க பகுதி உட்பட உடல் முழுதும் காயமிருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து சிறுமியை உயிருடன் மீட்க முடியவில்லை என்றார் கேரள போலீசார் வருத்தம் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில், ஆலம் குற்றவாளி என்று நிரூபனம் ஆனதையடுத்து அவருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

அதாவது, இயற்கைக்கு முரணான வகையில் சிறார்வதை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவருக்கு 49 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 5 ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தினமான நேற்று (14.11.2023) சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.

அதோடு போலீசாரின் துரித நடவடிக்கையால், குற்றம் நடந்த 100 நாட்களில் நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்கியுள்ள பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த தீர்ப்புக்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

Also Read: “மின்சாரத்தை திருடி வீடு அலங்கரிப்பு...” : சர்ச்சையில் சிக்கிய முன்னாள் முதல்வர் - அதிகாரிகள் விசாரணை !