India

”நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை” : 5 மாநில தேர்தலுக்காக அந்தர் பல்டி அடித்த பா.ஜ.க!

நாடு சுதந்திரம் அடையும் முன்பு சில வகுப்பைச் சேர்ந்த மக்கள் ஒடுக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குக் கல்வி உள்ளிட்ட முக்கிய உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது. இதனை முன்னிட்டு தந்தை பெரியார் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். அதில் ஒன்றுதான் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்தியாவில் 1871-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து1881-ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் இறுதியாக 1931-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1951 ஆம் ஆண்டு தனது முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. ஆனால், அதில் சாதிவாரி குறித்த எந்த விவரமும் எடுக்கப்படவில்லை.

1931-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பை வைத்தே சாதி ரீதியான இட ஒதுக்கீடு வகைப்படுத்தப்பட்டு தற்போது வரை நடைமுறையிலிருந்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்த காலகட்டமான கடந்த 2011-ம் ஆண்டு நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிக்கப்பட்டன.

ஆனால் அதன்பிறகு 2014-ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜக ஆட்சியமைத்த பிறகு அதனை வெளியிடவில்லை. மேலும் அதில் பிழை இருப்பதாகவும், தவறாக இருப்பதாகவும் கூறி அதனை வெளியிட மறுத்துவிட்டது. இதற்கிடையில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளதால் காங்கிரஸ் சட்சி சாதிவாரி கணக்கெடுப்பைத் தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்து வருகிறது. மேலும் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. அதோடு சாதிவாரி கணக்கெடுப்பு ஜெரக்ஸ் போன்றது என ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தில் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க எதிர்க்கவில்லை என சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசியுள்ளார். இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வரும் நிலையில் பா.ஜ.க தேர்தலுக்காக தனது முடிவிலிருந்து பில்டி அடித்துள்ளது அமித்ஷாவின் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பா.ஜ.கவுக்கு பயம் வந்து விட்டது என இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அமித்ஷாவின் கருத்துக்குப் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Also Read: ”உங்களுக்கு இங்க முடி வெட்ட முடியாது” - ஆந்திராவில் தீண்டாமை : தாசில்தார் செய்த நெத்தியடி சம்பவம்!