India

தீவிரமடையும் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்: பாஜக அலுவலகத்திற்கு தீ வைப்பு - தவிக்கும் ஏக்நாத் ஷிண்டே!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாரத்தா சமூகத்தினர் பின் தங்கிய வகுப்பினராக 2018ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு, அவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் இதுநாள் வரை மாரத்தா மக்களுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாமலேயே உள்ளது. இதனால் இவர்கள் தொடர்ந்து தங்களது உரிமைகளுக்காகப் போராட்டங்களை நடத்தி வருகிறனர். கடந்த ஆகஸ்ட் மாதம் கூட மராத்தா சமூகத் தலைவர்களில் ஒருவரான மனோஜ் ஜராங்கே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

அப்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவரை நேரில் சந்தித்து போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படியும் அக்டோபர் 24ம் தேதிக்குள் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கொடுத்தார்.

இந்த காலக்கெடு முடிந்ததை அடுத்து தற்போது மீண்டும் மாரத்தா மக்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு எம்.பிக்கள் ஹேமந்த் பாட்டீல், ஹேமந்த் கோட்சே ஆகிய இருவர் ராஜினாமா செய்துள்ளனர்.

இதேபோல் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் லட்சுமண் பவாரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இப்படிஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர்கள் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள பா.ஜ.க MLA பிரசாந்த் பம்ப் அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போராட்டம் வலுப்பெற்று வருவதால் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்துள்ளார்.

Also Read: உங்கள் செல்போன் Hack செய்யப்படலாம்: எதிர்கட்சி MP-களுக்கு வந்த அலர்ட் - ஐபோன் நிறுவனத்தின் விளக்கம் என்ன?