India

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பழுது : உடைந்த டைல்ஸ்களை மாற்ற ரூ.32 கோடிக்கு டெண்டர் அறிவித்த மோடி அரசு!

இந்திய வரலாற்றின் அடையாளங்களில் ஒன்று பழைய நாடாளுமன்ற கட்டடம். இங்குதான் இந்தியாவின் பெருமையாகப் போற்றப்படும் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தரமாக இருக்கும் நாடாளுமன்றத்திற்குப் பதிலாக புதிய நாடாளுமன்றத்தைக் கட்டியது.

அதுவும் மக்கள் கொரோனா காலத்தில் அவதிப்பட்டபோது, ரூ.1200 கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கான பணிகள் வேகமாகச் செயல்படுத்தப்பட்டது. எதிர்கட்சிகள் கண்டித்தும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்தது ஒன்றிய அரசு.

இதையடுத்து புதிய நாடாளுமன்றக் கட்டடம் கடந்த மே மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. பணிகள் முழுமையாக முடிவடையாததால் ஆகஸ்ட் மாதம் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்றது. பின்னர், மகளிர் மசோதாவைத் தாக்கல் செய்வதற்காக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது.

இதனிடையே புதிய கட்டடத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளைச் சரிசெய்ய 32 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாற்காலிகளைச் சரிசெய்வது, பிளம்பிங், பாதுகாப்புப் பணிகளுக்கு 6.64 கோடி ரூபாயும், உடைந்த டைல்களை மாற்றுவதற்கு 5.99 கோடி ரூபாயும், புல்வெளி பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு 20 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கப்பட உள்ளதால் அதற்கு முன்னதாக இந்த பழுதுப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு புதிய கட்டடத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால் அதன் உறுதித்தன்மை மீது சந்தேகம் எழுந்துள்ளது எனவும், முறைகேடுகள் நடந்துள்ளதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Also Read: “வாயைத் திறந்தாலே பொய்யும் புளுகும்தான்”: பொய்ப்பிரமாணம் எடுத்துள்ள ஆளுநருக்கு ஆதாரத்தோடு முரசொலி பதிலடி!