India
போலி அமலாக்கத்துறை அதிகாரி.. 4 MLA-க்களிடம் பணம் பறிக்க முயன்ற நபர் - பொறி வைத்து பிடித்த புதுவை போலிஸ்!
புதுச்சேரியின் உழவர்கரை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் சிவசங்கரன். இவரது வீடு ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகர் முதல் குறுக்குத்தெருவில் உள்ளது. இந்த சூழலில் இவரது செல்போன் எண்ணுக்கு நேற்று மாலை சுமார் 5.30 மணி அளவில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதனை இவர் எடுத்து பேசியபோது, மர்ம நபர் ஒருவர், தான் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி என்று பேசத்தொடங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சிவசங்கரனும் அவருடன் பேசியுள்ளார். அப்போது அந்த நபர், நீங்கள் கடந்த 2 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் வந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை கேட்ட சிவசங்கரனும், தாராளமாக விசாரித்துக்கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். பின்னர் அடுத்த சில நிமிடங்களில் சிவசங்கரன் வீட்டிற்கு டிப்-டாப் உடையில் கம்பீரமான தோற்றத்தில் ஒருவர் வீட்டிற்கு வந்தார்.
அப்போது சிவசங்கரன் அவரிடம் விசாரிக்கையில், தான் அமலாக்கத்துறை அதிகாரி என்றும், போனில் பேசியது தான் தான் என்றும்கூறினார். அதைத்தொடர்ந்து அவர், சிவசங்கரன் வருமானம் மற்றும் சொத்து விவரங்களை கேட்டுள்ளார். சந்தேகம் அடைந்த அவர், உடனே ரெட்டியார்பாளையம் போலீசுக்கு தெரிவித்தார். எனினும் சந்தேகம் வராமல் இருக்க தொடர்ந்து பேச்சு கொடுத்து வந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ், அந்த நபரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், தான் அமலாக்கத்துறை அதிகாரி இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் (35) என்றும், அவர் ஏற்கனவே புதுவை எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு சென்று இதுபோல் மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது. அதாவது, எம்.எல்.ஏ., சிவசங்கரன் வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக, முதலில் கருவடிக்குப்பம் மகாவீர் நகரில் உள்ள காலாப்பட்டு தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வான கல்யாணசுந்தரம் வீட்டிற்கு சென்று அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
தொடர்ந்து 2-வதாக லாஸ்பேட்டை சாந்தி நகரை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் வீட்டிற்கும் சென்று பணபரிவர்த்தனை மோசடியில் செய்வதாக புகார் வந்ததாக கூறியும், அந்த தவறை மறைக்கவும், உயர் அதிகாரிகளை சரிகட்டவும் மிரட்டி பணம் கேட்டுள்ளார். 2 எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து தலா ரூ.1 லட்சம் லஞ்சம் தரவேண்டும் எனவும் பேரம் பேசியதும், ஆனால் இருவரும் பணம் கொடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
மேலும் உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு என்கிற குப்புசாமியை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு, தன்னை அமலாக்கத்துறை அதிகாரி எனக்கூறி பேசியுள்ளது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவரிடம் இதுபோல் வேற யாரையாவது மோசடி செய்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் தன்னை அமலாக்கத்துறை அதிகாரி எனக்கூறி நடித்து 4 எம்.எல்.ஏ.க்களிடம் பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!