India

உயிரிழந்த முதல் அக்னிபாத் ராணுவவீரர் : மறுக்கப்பட்ட பென்ஷன் உள்ளிட்ட உரிமைகள் - முழு விவரம் என்ன ?

கடந்த வருடம் மாதம் ஒன்றிய அரசு ராணுவத்தில் குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் 'அக்னிபாத்' திட்டத்தை அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கும் பரவி போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் இரயில்களுக்கு தீவைத்த தங்கள் எதிர்ப்புகளை காட்டினர்.

மேலும் பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்து பேசிய பா.ஜ.க. தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களை சூரையாடி தீ வைத்ததால் பெரும் வன்முறைகாடாக அப்பகுதிகள் காட்சி அளித்தது. இதில் பல சேதாரங்கள் ஏற்பட்டது.தெலுங்கானாவில் இந்த திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது ரயில்வே போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இந்த திட்டம் தொடர்பாக பேசிய பா.ஜ.க தலைவர்கள், அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு ராணுவப் பணி முடிந்த பிறகு பா.ஜ.க அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலை கொடுக்கப்படும் என கூறினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர்ந்த முதல் ராணுவ வீரர் உயிரிழந்த நிலையில், அவருக்கு ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் ஔரங்காபாத்தை சேர்ந்தவர் லக்ஷ்மண் கவாட். இவர் 'அக்னிபாத்' திட்டத்தின்படி, ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.

அவர் சியாச்சின் பகுதியில் பணிபுரிந்துக்கொண்டிருந்தபோது, உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் மரணத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ஓய்வூதிய பலனோ, மருத்துவ உதவி உத்தரவாதமோ, ராணுவ கேன்டீன் பயன்பாடோ கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேரும் வீரர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் ஏதும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: நபிகள் குறித்து அவதூறாகப் பேசிய நபருக்குத் தேர்தலில் சீட் கொடுத்த பாஜக : தெலங்கானா மக்கள் அதிர்ச்சி!