India

நாட்டையே உலுக்கிய பெண் பத்திரிகையாளர் கொலை வழக்கு : 15 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தீர்ப்பு !

கடந்த 2008-ம் ஆண்டு பிரபல பெண் பத்திரிகையாளர் செளமியா விஸ்வநாதன் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 ஆண்டுகளுக்கு பிறகு 5 பேர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து தற்போது பார்க்கலாம்..

கேரளாவை சேர்ந்தவர் விஸ்வநாதன் - மாதவி தம்பதி. இவர்களுக்கு செளமியா என்ற பெண் பிள்ளை இருந்தார். ஊடகத்துறையில் அதிகம் நாட்டம் உள்ள செளமியா, 'இந்தியா டுடே' ஆங்கில நாளேடுவில் பணிக்கு சேர்ந்தார். டெல்லியில் உள்ள இந்திய டுடேவில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2008, செப்., 30 அன்று வழக்கம்போல் தனது பணிபுரிந்து அறைக்கு திரும்பி கொண்டிருந்தார்.

தனது காரில் டெல்லியின் வசந்த் குஞ்சில் உள்ள வீட்டுக்கு அவர் கொண்டிருந்தபோது, நெல்சன் மண்டேலா மார்க்கில் அவரது காரில் நெற்றிபொட்டில் சுடப்பட்டு உயிரிழந்து கிடந்தார். அவர் இறந்தபோது அவருக்கு வயது 25 ஆகும். இதையறிந்து வந்த போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது செளமியா, அங்கிருக்கும் கொள்ளை கும்பலால் தாக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது சுடப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

தொடர்ந்து விசாரிக்கையில், மார்ச் 19, 2009-ல் ஜிகிஷா கோஷ் என்ற கால் சென்டர் ஊழியர் ஒருவரும் சுடப்பட்டு கொல்லப்பட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், செளமியா விஸ்வநாதனையும் இவர்கள் கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் இந்த கும்பலின் கூட்டாளிகளான அஜய் குமார், அஜய் சேத்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து செளமியாவை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஜூன் 22, 2009 அன்று, ஐபிசி பிரிவு 302 (கொலை) மற்றும் 34 (பொது நோக்கம்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அஜய் சேத்தியைத் தவிர மற்ற 4 பேர் மீதும் 620 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் அக்டோபர் 8, 2009 அன்று, குற்றம் சாட்டப்பட்ட ரவி கபூருக்கு எதிராக MCOCA சட்டத்தின் கீழ் முதல் துணை குற்றப்பத்திரிகை டெல்லி காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்டது. (MCOCA சட்டம் என்பது மஹாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்த சட்டம் (Maharashtra Control of Organised Crime Act) என்று அழைக்கப்படும். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தோடு ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர் முழு குற்றவாளி என்று கருதப்படுவார்.

தொடர்ந்து மே 9, 2011 அன்று, நீதிமன்றம் அனைத்து குற்றம் சாட்டப்பட்ட நபர்களையும் MCOCA இன் கீழ் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற சிண்டிகேட்டை நடத்தியதாக குற்றம் சாட்டியது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் ஜிகிஷா கோஷ் என்ற கால் சென்டர் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2016 -ம் ஆண்டு ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களில் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கால் சென்டர் ஊழியர் கொலை வழக்கு தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், 2017 ஆம் ஆண்டில் மாலிக்கின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம் கபூர் மற்றும் சுக்லாவின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. எனினும் பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இரு தரப்பு வாதங்களும் முடிவுக்கு வந்த நிலையில் இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரவீந்திர குமார் பாண்டே, செளமியா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பெரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினார். சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் குமார், அஜய் சேத்தி ஆகிய 5 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழக்கங்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பு தற்போது பாதிக்கப்பட்ட சௌமியாவின் குடும்பத்திற்கு ஒரு ஆறுதலாக அமைந்துள்ளது.

Also Read: ரூ.100 கோடி மோசடி கும்பலிடம் மிரட்டி பணம் பறித்த பாஜக நிர்வாகி : 5 பேரை கொத்தாக தூக்கிய போலிஸ் !