India

பணியின்போது உயிரிழந்த 'அக்னிபாத்' வீரர்: ராணுவமரியாதை மறுப்பு - எதிர்க்கட்சிகள் கண்டனம் !

கடந்த வருடம் மாதம் ஒன்றிய அரசு ராணுவத்தில் குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் 'அக்னிபாத்' திட்டத்தை அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கும் பரவி போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் இரயில்களுக்கு தீவைத்த தங்கள் எதிர்ப்புகளை காட்டினர்.

மேலும் பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்து பேசிய பா.ஜ.க. தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களை சூரையாடி தீ வைத்ததால் பெரும் வன்முறைகாடாக அப்பகுதிகள் காட்சி அளித்தது. இதில் பல சேதாரங்கள் ஏற்பட்டது.தெலுங்கானாவில் இந்த திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது ரயில்வே போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இந்த திட்டம் தொடர்பாக பேசிய பா.ஜ.க தலைவர்கள், அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு ராணுவப் பணி முடிந்த பிறகு பா.ஜ.க அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலை கொடுக்கப்படும் என கூறினர்.

இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர்ந்த ராணுவவீரர் ஒருவர் ராணுவத்தில் பணியாற்றும் போது இறந்த நிலையில், அவரின் உடலுக்கு ராணுவ மரியாதை கூட செலுத்தப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தை சேர்ந்தவர் அம்ரித்பால் சிங். இவர் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ந்த்துள்ளார்.

இவர் ஜம்மு காஷ்மீர் ரைபிள் படையில் பூஞ்ச் செக்டாரில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 11ம் தேதி பணியின் போது பணியில் இருந்தபோதே உயிரிழந்தார்.இதனையடுத்து உயிரிழந்த அம்ரித் பாலின் உடல் நேற்று முன்தினம் அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு அவருக்கு ராணுவ மரியாதை வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ராணுவம் சார்பில் அவ்வாறு எந்த மரியாதையும் வழங்கப்படவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவரின் உடல் ராணுவ மரியாதையின்றி அடக்கம் செய்யப்பட்டது. இதற்கு காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் உள்பட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.