India

ம.பியில் தொடர்ந்து பா.ஜ.கவிற்கு தோல்வி முகம் : அடுக்கடுக்காக வெளிவரும் கருத்துக்கணிப்புகள் !

மத்திய பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் சிறிய கட்சிகளின் ஆதரவோடு அங்கு ஆட்சியை பிடித்தது. ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.

இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அங்கு அதிருப்தி அலைவே தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்த சூழலில் மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் தேதி அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி மத்திய பிரதேசத்துக்கு நவம்பர் 17-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொடர்ந்து டிசம்பர் 3-ம் தேதி 5 மாநிலங்களுக்கும் ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட காட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகிறது.

இந்த சூழலில் தற்போது LOK POLL நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு ஆய்வில் காங்கிரஸ் முன்னிலை பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தில் அடுத்து ஆட்சியமைக்கப்போவது யார் என்பது குறித்து ஒரு கருத்து கணிப்பை லோக் பால் நிறுவனம் நடத்தியது. இது தொடர்பான முடிவை தற்போது வெளியிட்டிருக்கிறது.

அதில் 230 சட்டப்பேரவை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க 43% - 45% பெற்று 98- 110 இடங்களை கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் 44% - 46% பெற்று 120 - 132 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

முன்னதாக Navbharat Samachar என்ற நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 55 இடங்கள்தான் கிடைக்கும் என்றும் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும் Times Now Navbharat என்ற நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பில் ஆளும் பா.ஜ.க-வை ஓரங்கட்டி, 118 முதல் 128 பிடித்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தோல்வி பயத்தில் மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 3 ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் 7 எம்.பி.க்களையும் பா.ஜ.க களம் இறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: "பாஜக கூட்டணியின் 40 தலைவர்கள் எங்கள் கட்சியில் சேர ஆர்வமாக இருக்கிறார்கள்" -கர்நாடக காங்கிரஸ் அறிவிப்பு!