India

ராஜினாமாவை ஏற்க மறுத்த மாநில அரசு.. பாதயாத்திரை சென்ற பெண் ஆட்சியர் கைது.. ம.பி-யில் பரபரப்பு !

மத்தியப்பிரதேச மாநிலத்தின் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக ஷிவ்ராஜ் சவுகான் இருந்து வருகிறார். அங்கு மாநில அரசின் மீது ஏராளமான குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதனால் அங்கு அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அங்கு பீட்டல் மாவட்டத்தில் துணை ஆட்சியராக இருந்தவர் நிஷா பாங்ரே. பட்டியலின சமூகத்தை சேர்ந்த இவர் தனது சொந்த கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாநில அரசிடம் விடுமுறை கேட்டுள்ளார். எனினும், அவருக்கு விடுப்பு வழங்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு உயர் அதிகாரிகளிடம் தனது நிலையைக் கூறி விடுமுறை தருமாறு கோரியுள்ளார். ஆனால், இறுதிவரை அவருக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக துறை அலுவலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் கடிதத்தையும் மாநில அரசு அதிகாரிகள் ஏற்காமல் இருந்துள்ளனர். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த நிஷா பாங்ரே, தலைநகரை நோக்கு பாதயாத்திரை செய்வதாக அறிவித்தார். அதன்படி, கடந்த 28ம் தேதி அவர் இந்த நடைப்பயணத்தை தொடங்கினார்.

அவரின் இந்த யாத்திரை கடந்த 9-ம் தேதி தலைநகர் போபாலுக்கு வந்தடைந்த நிலையில் , அங்கிருந்து மாநில முதலவர் சிவ்ராஜ் சிங் சவுகான் வீடு நோக்கி பாத யாத்திரையை தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இஸ்ரேல் VS ஹமாஸ் : பாலஸ்தீன போராளி குழுக்கள் உருவாக காரணம் என்ன ? அவை சாதித்ததும், சறுக்கியதும் !