India

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது..” - ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சியில் புதுவை மக்கள் !

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே 13 முறை புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசு இருப்பதால் புதுச்சேரியில் இந்த கூட்டணி ஆட்சியின்போதே மாநில அந்தஸ்து கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஆட்சியாளர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இதனிடையே கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது புதுச்சேரி சட்டசபையில் மாநில அந்தஸ்து தீர்மானம் அனைத்துக்கட்சி ஆதரவுடன் 14-வது முறையாக ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்ப காலதாமதமானது. இதற்கு அங்கே துணைநிலை ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தரராஜன்தான் காரணம் என்று அரசியல் கட்சிகளின் குற்றம்சாட்டி வந்தனர். தொடர்ந்து பல்வேறு கண்டனங்கள், கோரிக்கைகள், சர்ச்சைகளுக்கு பிறகு மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் புதுச்சேரி அரசின் தீர்மானத்துக்கு பதில் அளித்து ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடித்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மாநில அந்தஸ்து கிடையாது, புதுவை யூனியன் பிரதேசமாகவே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த பதில் புதுச்சேரி ஆட்சியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது, யூனியன் பிரதேசமாகவே தொடரும் என ஒன்றிய அரசின் கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ரங்கசாமி, "ஒன்றிய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து மாநில அந்தஸ்து தொடர்பாக வலியுறுத்தப்படும்" என்றார்.

Also Read: ரத்தத்தால் மூழ்கடிக்கப்படும் புனித பூமி : இஸ்ரேல் -பாலஸ்தீன் பிரச்சினையின் வரலாற்று பின்னணி என்ன ?