India
மேட்ரிமோனி தளம் மூலம் இளம்பெண்ணிடம் ரு.10 லட்சம் மோசடி.. நைஜிரியரை சுற்றி வளைத்து பிடித்த போலீஸ் !
சென்னை அயனாவரத்தை சேர்ந்த பெண் ஒருவர் மேட்ரிமோனி இணையதளத்தில் திருமணத்திற்காக பதிவு செய்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவருடன் பேசத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து இருவரும் தங்கள் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டு பேசுகையில், ஒருவரை ஒருவர் பிடித்து போயுள்ளது. அந்த நபர் வெளிநாட்டில் இருந்து பேசுவதாக கூறியதால் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்கவில்லை.
இந்த சூழலில் அந்த நபர், அந்த பெண்ணுக்கு பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு புதுடெல்லி விமான நிலையத்திலிருந்து அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது பேசிய அந்த அதிகாரி, அந்த பெண்ணுக்கு பார்சல் வந்திருப்பதாகவும், அதனை பெற்றுக்கொள்ள பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணும், அந்த அதிகாரி கூறியபடி சில வங்கி கணக்குகளில் சுமார் ரூ.10,33,000/- லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளார். இருப்பினும் அவருக்கு அந்த பார்சலும் வந்து சேரவில்லை, அந்த நபரும் அவரை தொடர்பு கொள்ளவில்லை. இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அந்த பெண் உணர்ந்துள்ளார்.
பின்னர் பாதிக்கப்பட்ட அந்த பெண் இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், வங்கி கணக்குகள், மொபைல் எண்கள் உள்ளிட்ட பல தகவல்களை சேகரித்தனர். அப்போது அந்த வங்கி கணக்கு விவரத்தில் பீகார், மத்திய பிரதேசம், தெற்கு டெல்லி ஆகிய இடங்களில் போலி இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரிக்கையில், உத்தர பிரதேசத்தின் நொய்டாவில், அந்த மொபைல் எண்கள் செயல்பாட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக தனிப்படை போலிசார் உத்தரபிரதேசம் விரைந்து மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த Chukwuemeka Ikedinobi (33) என்ற நபரை கைது செய்தனர். மேலும் குற்றவாளியிடமிருந்து 8 செல்போன்கள், 1 லேப்டாப், 3 டெபிட் கார்ட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர் நேற்று (07.10.2023) சென்னை எழும்பூர், கனம் கூடுதல் தலைமை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இணையதளத்தில் மேட்ரிமோனி திருமணத்திற்காக பதிவு செய்பவர்களை குறிவைத்து திருமணம் செய்துகொள்வதாக நம்ப வைத்து ஏமாற்றி மோசடியில் ஈடுபடுகின்றனர். மேலும் அதிக மதிப்புமிக்க பார்சல்கள் கொரியர் மூலம் அனுப்பியதாக பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி பணம் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற மேட்ரிமோனி இணையதளத்தில் பரிசு மோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1930 என்ற எண்ணை அணுகுமாறும், ஆன்லைனில் www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்குமாறு பொதுமக்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!