India

“NewsClick முடக்கம் - கேள்வி கேட்பவர்களுக்கு மிரட்டல்” - மூத்த பத்திரிகையாளர் N.ராம் அளித்த நேர்காணல்!

சீனாவிடமிருந்து ‘நியூஸ் கிளிக்’ நிறுவனம் நிதி பெற்றதாக ஆதாரமற்ற செய்தியை அமெரிக்காவின் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ என்ற ஊடக நிறுவனம் பொய்ச் செய்தி ஒன்றை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதனடிப்படையில், 2021 செப்டம்பரில் ‘நியூஸ் கிளிக்’ ஊடக அலுவலகத்தில் சோதனையிட்ட அமலாக்கத்துறை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ‘நியூஸ் கிளிக்’ நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவுக்குச் சொந்தமான ரூ. 4.5 கோடி மதிப்பிலான வீட்டையும் ரூ. 41 லட்சம் நிரந்தர வைப்புத் தொகையை யும் முடக்கியது.

இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 3ம் தேதி ‘நியூஸ் கிளிக்’ ஊடகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பத்திரிகையாளர்களுக்குச் சொந்தமான 100 இடங்களில் 12 மணிநேர சோதனை நடத்திய டெல்லி காவல்துறை, செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தது. ‘நியூஸ் கிளிக்’ ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் 9 பேரிடம், 25 கேள்விகள் அடங்கிய பட்டியலைக் கொடுத்து விசாரணை நடத்தியது.

முன்னதாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் எனப்படும் ‘உபா’ (UAPA) சட்டத்தின் கீழ் புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்த, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, 12 மணிநேர சோதனை, விசாரணைக்குப் பின், ‘நியூஸ் கிளிக்’ முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா, மனிதவள பிரிவின் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை இரவு கைது செய்தது.

‘நியூஸ் கிளிக்’ மீதான தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ‘இந்தியா’ கூட்டணியிலுள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்களின் தேசிய கூட்டமைப்பு, டெல்லி யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் மற்றும் கேரளா யூனியன் ஆப் ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட் உள்ளிட்ட அமைப்புக்கள், ‘இது மோடி அரசின் ஒடுக்கு முறை’ என்று கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும் ‘நியூஸ் கிளிக்’ முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா, மனிதவள பிரிவின் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய டெல்லி காவல்துறை, தற்போது விசாரணைக்காக 7 நாள் போலீஸ் காவலிலும் எடுத்துள்ளது.

ஆனால், செவ்வாயன்று காலையே எப்.ஐ.ஆர் பதிவு செய் யப்பட்டும், அதன் நகலை டெல்லி காவல்துறை வழங்கவில்லை. கைது நடவடிக்கை மேற் கொண்டு, புர்காயஸ்தா, அமித் சக்ரவர்த்தி ஆகியோரை போலீஸ் காவலுக்கும் கொண்டு சென்று விட்டனர். எப்.ஐ.ஆர் பதிவு செய்தும் 24 மணிநேரத்திற்கும் மேலாகி விட்டது. எனினும் அதன் நகலை டெல்லி காவல்துறை வழங்கவில்லை. இதையடுத்து, எப்.ஐ.ஆர் நகலைக் கோரி, பிரபீர் புர்காயஸ்தா, அமித் சக்ரவர்த்தி ஆகியோரின் வழக்கறிஞர்கள் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தீக்கதிர் நாளேட்டில் நியூஸ் கிளிக் மீது நடத்தப்பட்ட இத்தகைய தாக்குதல் நடவடிக்கை குறித்து இந்தியா டுடே’வின் ராஜ்தீப் சர் தேசாய்க்கு இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் அளித்த நேர்காணலை வெளியிட்டுள்ளது. அந்த நேர்காணல் பின்வருமாறு :-

ராஜ்தீப் சர்தேசாய்: நியூஸ் கிளிக் மீதும் அதன் பத்திரிகையாளர்கள் மீதும் நடத்தப்படும் விசாரணைகள் குறித்து உங்கள் பார்வை என்ன?

என்.ராம்: இது ராணுவ ஆட்சி எடுக்கும் நடவடிக்கை போல ஊடகங்கள் மீது ஒரு கொடூரமான தாக்குதல். நியூஸ் கிளிக் இலக்காக ஆகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு நியூயார்க் டைம்ஸ் இதழில் வந்த செய்தியின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. நியூயார்க் டைம்ஸ் இதழில் வந்த செய்தியே பொய்தான்! எங்குமே அவர்கள் எவ்வித ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

உண்மையில் அந்த கட்டுரையில் இரு இடங்களில்தான், அதுவும் ஆதாரமற்ற வகையில் நியூஸ் கிளிக் பற்றி குறிப்பிடப்படுகிறது. அந்த இதழில் நியூஸ் கிளிக்கிற்கு சீனப்பணம் வந்ததாகவோ அல்லது சட்டத்துக்கு விரோதமாக நியூஸ் கிளிக் செயல்பட்டதாகவோ எங்குமே குறிப்பிடப்படவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 2021ம் ஆண்டிலிருந்தே நியூஸ் கிளிக் மீது அரசாங்கம் பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் எதையும் நிரூபிக்க முடியவில்லை. ஏனெனில் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. இப்பொழுது நியூயார்க் டைம்ஸ் செய்தி இந்த தாக்குதலுக்கு மீண்டும் காரணமாக அமைந்துள்ளது.

நியூஸ் கிளிக் இதழுக்கு லாபம் நோக்கம் அல்ல. அது முற்போக்கான இணைய இதழ். அதனை காண்பவர்கள் எண்ணிக்கை மிகப்பெரியது என சொல்ல முடியாது. ஆனால் அதன் செய்திகள் ஆழமான அதிர்வலைகளை ஏற்படுத்தின. விவசாயிகள் போராட்டத்தில் அது தனித்துவமாக செயல்பட்டு பிரபலம் ஆனது. எனவே இந்த விசாரணைகள் என்பது இரு நோக்கங்களை கொண்டது. ஒன்று- நியூஸ் கிளிக்கை முடக்க வேண்டும். இரண்டு- அரசை கேள்வி கேட்பவர்களுக்கு இது ஒரு மிரட்டல்! எனவே இது ஊடகங்கள் மீது பெரிய தாக்குதல்தான்! பத்திரிகைகள் மீதான மிக மோசமான தாக்குதல்களை நான் பார்த்திருக் கிறேன். ஆனால் இது மிக மிக மோசமான தாக்குதல்.

ராஜ்தீப்: நீங்கள் இதனை பத்திரிகை மீதான தாக்குதல் என சொல்கிறீர்கள். ஆனால் பிரபீர் புர்காயஸ்தா உட்பட, நியூஸ் கிளிக்கின் இயக்குநர்கள் நெவிலே ராய் சிங்கம் எனும் அமெரிக்க குடிமகனிடமிருந்து நிதி பெற்றதாகவும் அவர் ஷாங்காயில் வசிக்கிறார் எனவும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானவர் எனவும் அரசாங்கம் குற்றம் சாட்டுகிறதே? மோடிக்கு எதிராகவும் சீனாவுக்கு ஆதரவாகவும் செய்திகளை வெளியிட நியூஸ்கிளிக் பயன்படுத்தப்பட்டது எனவும் குற்றம்சாட்டப்படுகிறதே?

என்.ராம்: நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளிவந்த கட்டுரையை நான் கையில் வைத்துள்ளேன். எங்குமே அதில் சீன பணம் நியூஸ் கிளிக்கிற்கு வந்தது என கூறப்பட வில்லை. சீனா குறித்து சாதக கருத்துகள் ஆங்காங்கே கூறப்படுகிறது என்றுதான் எழுதப்பட்டுள்ளது. அதற்கும் எவ்வித ஆதார மும் இல்லை. நியூஸ் கிளிக் வெளியிடும் செய்தி களில் எவ்வளவு சீன ஆதரவு என்பது பற்றி விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

உண்மை யில், அவ்வாறு நியூஸ்கிளிக் செய்யவில்லை. மேலும், வாதத்துக்காக வைத்துக் கொண்டா லும் சீனா பற்றிய செய்திகளைக் கூறுவது - வெளியிடுவது எப்படி தவறாகும்? அது இந்தியாவில் தடை செய்யப்படவில்லை. அந்த செய்தியை ஒருவர் ஏற்கலாம்; அல்லது மறுக்க லாம். ஆனால் செய்தி வெளியிடுவது சட்ட விரோதம் அல்ல. குறிப்பாக அது பயங்கரவாதம் அல்ல.

ராஜ்தீப்: நீங்கள் இரு முக்கியமான கருத்துகளை முன்வைக்கிறீர்கள். ஒன்று- சீனா பற்றி செய்தி வெளியிடுவது சட்டவிரோதம் அல்ல. இரண்டாவது அதற்காக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை பாயக்கூடாது. அதாவது, தேச விரோத செயல்கள் என வலுவான ஆதாரங்கள் இருந்தால்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்கிறீர்களா?

என்.ராம்: ஆம். இன்று அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் எதுவும் எந்த நீதிமன்றத்திலும் நிற்கப் போவதில்லை. நியூஸ் கிளிக் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு களுக்கும் உண்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை. நியூஸ் கிளிக்கிற்கு சீனாவின் பணம் வரவில்லை. நெவில் ராய் சிங்கம் பற்றி நான் அறிவேன். பலரும் அறிவார்கள். அவர் அமெரிக்காவில் “Thought Works” எனும் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

அதனை 780 மில்லியன் டாலர்களுக்கு விற்றார். அதன் பெரும் பகுதியை அமெரிக்கா வின் லாப நோக்கமற்ற பல அமைப்புகளுக்கு வழங்கினார். அவ்வாறு லாப நோக்கமற்ற அமைப்புகளுக்கு வழங்கும் போது, செய்யும் பொழுது அதற்கான விவரங்களை அமெரிக்க சட்டப்படி வெளியிட வேண்டியது இல்லை. அவர் ஷாங்காயில் வசிக்கிறார் எனில், அவர் ஏதாவது சீன அமைப்புடன் இசைந்து செயல்படு கிறார் எனில், அது அவரது உரிமை. அதனை அமெரிக்க சட்டம் எதுவும் தடுக்கவில்லை.

ராஜ்தீப்: இது சட்டவிரோதமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேசப்பாதுகாப்புக்கு மிக ஆபத்தானது என சிலர் கூறலாம் அல்லவா? ராய் சிங்கம் போன்றவர்கள் நியூஸ் கிளிக்கின் கொள்கைகளை உருவாக்குவதில் தாக்கம் விளைவிக்கின்றனர் எனில் அது மிக ஆபத்தானது என குற்றம் சொல்லலாம் அல்லவா?

என்.ராம்: பல எதேச்சதிகார அரசாங்கங் கள் அதனைத்தான் செய்கின்றன. தேசப்பாது காப்பு/ பயங்கரவாதம் இந்த இரண்டையும்தான் ஆயுதங்களாக பயன்படுத்துகின்றனர். மேற்கத்திய நாடுகளில் கூட பேச்சுரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது குறித்து கவலைகள் அதிகமாகி வருகின்றன. நியூஸ் கிளிக், சீன ஆதரவு செய்திகளை வெளியிட்டது என்ப தற்கு ஒரே ஒரு காணொலியை ஆதாரமாக காட்டுகின்றனர். அது சீனாவின் சோச லிசப் புரட்சியின் 70வது ஆண்டு குறித்தானது. இந்த ஒரு காணொலியை ஆதராமாக கொண்டு நடவடிக்கை எடுப்பது சிறுபிள்ளைத்தன மானது.

நான் ஏற்கெனவே கூறியது போல அப்படியே சீன ஆதரவுக் கருத்துகள் கூறி னாலும் என்ன தவறு? அது சட்டவிரோதம் இல்லை. உதாரணத்துக்கு சூழல் பாதுகாப்பு குறித்து சீனாவின் கருத்தும் இந்தியாவின் கருத்தும் கிட்டத்தட்ட ஒன்றுதான். எனவே அது குறித்துப் பேசுவதில் என்ன தவறு? சீனா பற்றிய கருத்துகளை நீங்கள் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். அரசாங்கம் மகிழ்ச்சி அடையாமல் இருக்கலாம். ஆனால் சட்ட விரோதம் இல்லையெனில் அவற்றைக் கூறு வது எப்படி தவறாக இருக்க இயலும்?

ராஜ்தீப்: நியூஸ் கிளிக் மீது நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னணியில் நீங்கள் ஊடகங்களுக்கும் மோடி அரசுக்கும் என்ன கருத்து சொல்கிறீர்கள்?

என்.ராம்: அனைத்து ஊடகங்களும் அமைப்புகளும் பத்திரிகையாளர்களும் நியூஸ் கிளிக்கிற்கு ஒருமைப்பாடு தெரிவிக்க வேண்டும். அனைத்து கருத்து வேறுபாடு களையும் தள்ளிவைத்துவிட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பிரஸ் கிளப் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எடிட்டர்ஸ் கில்டும் எதிர்ப்பு தெரிவிக்கும் என நம்புகிறேன். நீங்கள் அதற்கு தலைவராக இருந்துள்ளீர்கள். கடந்த காலத்தை போலவே இப்பொழுதும் கில்டு எதிர்ப்பு தெரிவிக்கும். பிரஸ் கவுன்சில் குறித்து எனக்கு நம்பிக்கை இல்லை. பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டிய நேரம் இது!

மோடி அரசைப் பொறுத்த வரை அவர்கள் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவின் நற்பெயர் சிதைகிறது. எங்கெல்லாம் சுதந்திர மும் பத்திரிகை சுதந்திரமும் மதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இந்தியாவின் பெயர் கெடுகிறது. வெளி நாடுகளில் இந்தியாவின் நற்பெயர்தான் உண்மையில் தேச நலன் என்பது!

ராஜ்தீப்: நாங்கள் சட்டப்படிதான் செயல்படுகிறோம்; விசாரணை முடியும் வரை பொறுத்திருங்கள் என அரசாங்கம் சொன்னால் உங்களது பதில் என்ன?

என்.ராம்: தில்லி காவல்துறையின் விசேட செல் செய்தது முற்றிலும் சட்ட விரோத மானது. பத்திரிகையாளர்களின் மடிக் கணினிகள் /அலை பேசிகள் என அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதற்கான எந்த எழுத்துப் பூர்வமான ஆவணங்களையும் தர வில்லை. மாதக்கணக்கில் அவற்றை திரும்பத் தரமாட்டார்கள். அலுவலகங்கள் மட்டு மல்லாது வீடுகளுக்கும் சென்று ரெய்டு நடத்தியுள்ளனர். அலுவலக ஊழியர்களைக் கூட அச்சுறுத்தியுள்ளனர். இதன் நோக்கம் என்ன என்பதையே புரிந்து கொள்ள இயல வில்லை. இது முற்றிலும் சட்டவிரோதமானது. இந்த நடைமுறையையே நாம் கேள்விக் குள்ளாக்க வேண்டும். நீதிமன்றங்களில் இது குறித்து வழக்கு தொடர வேண்டும். சிறந்த வழக்கறிஞர்கள் இதற்காக முன்வர வேண்டும்.

- நன்றி : தீக்கதிர்.

Also Read: “சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க எதிர்ப்பது ஏன்?” : கே.பாலகிருஷ்ணன் சிறப்புக் கட்டுரை!