India

“FIR நகல் கூட இல்லை.. எதுக்கு UAPA வழக்கு?” - ஒன்றிய பாஜக அரசுக்கு NEWSCLICK ஊடகம் சரமாரி கேள்வி !

டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம்தான் NewsClick. இணைய ஊடகமான இந்த நிறுவனம் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி வருகிறது. அதேபோல் தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ஆட்சியை பிடிக்கும் பா.ஜ.கவின் தந்திர வேலைகளும் இந்த இணையதளத்தில் செய்தியாகவும், கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளது.

இப்படி தொடர்ந்து பா.ஜ.க அரசின் முகத்தை கிழித்தெறிந்து வந்ததால் கடுப்பான ஒன்றிய பா.ஜ.க அரசு அமலாக்கத்துறையை ஏவியது. 2021ம் ஆண்டு NewsClick அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கி முறைகேடு செய்ததாகவும் குற்றம்சாட்டினர். அப்போதும் கூட பெரிதாக ஆதாரம் இல்லாததால், உச்சநீதிமன்றம், NewsClick மற்றும் அதன் உரிமையாளர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது.

அதன்பிறகும் தொடர்ந்து தங்கள் பணிகளை நேர்மையாக செய்து வந்த இந்த ஊடகத்துக்கு எதிராக பாஜகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். அதன் ஒரு பகுதி தான் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர், சீனாவிலிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு NewsClick பா.ஜ.க அரசுக்கு எதிராகச் செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து தொடர்ச்சியாக பா.ஜ.கவினர் NewsClick இணையதளத்திற்கு எதிராகவே கருத்து தெரிவித்து வந்தனர். அதன் எதிரொலியாக நேற்று NewsClick இணைய தளத்திற்குத் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வீடுகளில் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு திடீரென ஆய்வு செய்தது அதோடு அவர்கள் வீடுகளில் அத்துமீறி ரெய்டு நடத்தியது.

மேலும் பத்திரிகையாளர்களின் மடிக்கணினி, செல்போன்கள் உள்ளிட்ட உடமைகளையும் பறிமுதல் செய்தது. தொடர்ந்து NewsClick நிறுவனம் மீதும், நிறுவனர்கள் மீதும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று காலையில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறை ஆய்வு செய்தது.

தொடர்ந்து NewsClick ஊடகத்துக்கு சீல் வைத்ததோடு 2 பத்திரிகையாளர்கள் கைது செய்தது ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை. ஊடகத்தின் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசின் இந்த செயல்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள், ஊடகவியலாளர்கள், சக பத்திரிகையாளர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

ஊடகத்தின் முழு சுதந்திரத்தையும் ஒன்றிய பாஜக அரசு பறித்து வருகிறது. இது ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பி வருகிறது. தொடர்ந்து இந்த நிகழ்வுக்காக இன்று டெல்லியில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சீனாவிடம் இருந்து பணம் பெற்று அதற்கு ஆதரவாக NewsClick ஊடகம் செயல்பட்டு வருவதாக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை முன்வைத்து இந்த நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சீன நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றுக் கொண்டு செய்திகளை வெளிட்டதாக கூறப்படும் புகார்களை நியூஸ் கிளிக் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து NewsClick ஊடக நிறுவனம் அளித்த விளக்கம் பின்வருமாறு :

“எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த முதல் தகவல் அறிக்கையின் நகல்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை. எங்களது இணையதளம் சுதந்திரமானது. சீன நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றுக்கொண்டு செய்திகளை வெளிட்டதாக கூறப்படும் புகார்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை. சீனாவுக்காக பிரசாரம் செய்யும் எந்த செய்தியையும் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.

பத்திரிகை சுதந்திரத்தை மதிக்க மறுப்பது, அரசுக்கு எதிரான விமர்சனங்களை தேச விரோத பிரச்சாரமாக கருதும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. 2021ஆம் ஆண்டு முதல் நியூஸ் க்ளிக் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள், வரவு-செலவுகள், வெளிநாட்டு தொடர்புகள் குறித்து ஒன்றிய அரசின் பல்வேறு விசாரணை அமைப்புகள் ஆய்வு நடத்தி உள்ளன. இந்த ஆய்வுகளில் எந்த முறைகேடுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் உள்நோக்கத்துடன் வெளியான கட்டுரையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எந்த ஆதாரமும் இல்லாமல் ‘உபா’ போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் எப்படி வழக்குப் பதிவு செய்ய முடியும்?”

Also Read: “டெண்டர் விடப்பட்டதா? சாலை அமைக்கப்பட்டதா?” : அதிமுக ஆட்சியில் நடந்த சாலை முறைகேடு - நீதிமன்றம் கண்டனம்!