India

”ரமேஷ் பிதுரிக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்” : பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய டேனிஷ் அலி MP!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் சந்திரயான் 3 வெற்றி குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த டேனிஷ் அலி எம்.பியை பார்த்து அவரது மத்தை சொல்லி அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசினார்.

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி அனைவர் முன்பும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியது அனைவர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலி, பாஜக எம்பி அவ்வாறு பேசியதால், தான் இரவு முழுவதும் தூங்கவில்லை என்றும், அது தன்னை மிகவும் பாதித்தது என்றும் கண்கலங்கிப் பேட்டியளித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு டேனிஷ் அலி கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், "ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அது நாடாளுமன்றத்திற்கும், நாட்டின் ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல. பிரதமர் என்ற முறையில் நீங்கள் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் ஒரு எம்.பி இப்படிப்பட்ட வார்த்தைகளை எப்படிப் பயன்படுத்த முடியும்?. அவரது வார்த்தைகள் மலிவானது மற்றும் அசிங்கமானது. இதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதில் நீங்கள் அரசியல் செய்யாமல் ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனக்கு எதிராக அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகிறது. எனவே கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!