India

மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா.. நாடாளுமன்றத்தில் தாக்கல்: மசோதாவில் கூறியிருப்பது என்ன?

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப். 18 ஆம் தேதி தொடங்கியது. வரும் செப் 22-ம் தேதி வரை இக்கூட்டத் தொடர் நடைபெறுகிறது. முதல்நாள் கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால விவாதத்தில் அனைத்து கட்சி எம்.பி-களும் பங்கேற்று உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து நேற்று பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்குப் பிரியா விடை கொடுக்கப்பட்டு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவானது பல ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த கோரிக்கையாகும். முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் ஆட்சியில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும், போதிய ஆதரவு பெறவில்லை என்பதால் இது சட்டமாக ஆக்கப்படாமலே இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று இதன் மீது விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இம்மசோதாவின் சிறப்புகள் என்னவென்று பார்ப்போம்:-

1. மகளிர் இடஒதுக்கீடுக்காக அரசியல் சாசனத்தில் 128வது முறையாக திருத்தம் செய்த மசோதா.

2.நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு அளிக்கப்படும் 30% இட ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலினங்களைச் சேர்ந்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

3.மகளிருக்குத் தொகுதிகள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். தொகுதிகள் தேர்தலுக்குத் தேர்தல் மாறுபடும்.

4.தற்போது நடைமுறையில் உள்ள பட்டியலின பழங்குடியின தொகுதி ஒதுக்கீடுகள் மகளிர் ஒதுக்கீட்டால் பாதிக்கப்படாது.

5.மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்த பிறகே மகளிருக்கான இடஒதுக்கீடு அமலுக்கு வரும்.

6. 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு மகளிருக்கான 33% இடஒதுக்கீடு அமலுக்கு வர வாய்ப்பில்லை.

7. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்த பிறகு மாநில சட்டமன்றங்களிலும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

8. மொத்தமுள்ள சட்டமன்றங்களில் 50% சட்டமன்றங்கள் மகளிர் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகு சட்டம் அமலுக்கு வரும்.

Also Read: “தெலங்கானாவிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்..” - அமைச்சர் முதல் MP வரை.. பிரதமருக்கு குவியும் கண்டனம் !