India

நிலவில் சிவசக்தி என மோடி வைத்த பெயர் ஏற்கப்படுமா? நிலவில் இடம் வாங்கலாமா? - சர்வதேச சட்டம் கூறுவது என்ன ?

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.

அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அதிலிருந்து பிரிந்த விக்ரண் லேண்டர் சில நாட்களுக்கு முன்னர் வெற்றிகரமான நிலவில் தரையிறக்கப்பட்டது. இதனை இஸ்ரோ மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் ஆரவாரத்தோடு கொண்டாடினர்.இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த நாடு என்ற பெருமையை இந்தியா படைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சந்திரயான் 3 தரையிறங்கிய இடத்துக்கு பிரதமர் மோடி 'சிவசக்தி’ எனப் பெயரிட்டார். ஆனால், இப்படி நிலவின் ஒரு பகுதிக்கு ஒரு நாடு பெயர்சூட்ட முடியுமா எனவும் அதனை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளுமா எனவும் கேள்வி எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் பதிலளித்து வந்தனர். அதோடு கடந்த சில நாட்களாக நிலவில் பலர் இடம் வாங்கியதாகவும் செய்திகள் வெளியாகி வந்தது. இதன் காரணமாக நிலவில் பெயர் வைக்கும் விவகாரம் குறித்தும், நிலவில் இடம் வாங்குவது குறித்துமான பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

ஆனால், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நிலவின் எந்த ஒரு பகுதியையும் எந்த ஒரு நாடும் அல்லது தனிநபருக்கு உரிமை கொண்டாட முடியாது என்பது நிதர்சனமானதாகும். 1950-களின் காலகட்டத்தில் சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தீவிரம் காட்டின. மேலும், அந்த தருணத்தில் நிலவு மற்றும் பல்வேறு கோள்கள், நட்சத்திரங்களுக்கு பெயரிடுவதிலும் பல்வேறு போட்டிகள் எழுந்தன.

இந்த காலகட்டத்தில் பல்வேறு நாடுகளில் பிரநிதிகள் கூடி நிலவு மற்றும், கோள்கள், நட்சத்திரங்களுக்கு பெயரிடுவதற்கு உரிய அங்கீகாரத்தை ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த உலகளாவிய வானியல் ஒன்றியம் (International Astronomical Union) என்ற அமைப்புக்கு வழங்கினர். இது குறித்த ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளிய பல்வேறு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

அதன்படி நிலவு, கோள்கள், நட்சத்திரங்களுக்கு அதிகாரபூர்வ பெயர்களை இந்த வானியல் ஒன்றியமே சூட்டி வருகிறது. இந்த வானியல் ஒன்றியத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வானியல் அறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வானியல் ஒன்றியத்தின் விதிப்படி, நூறு ஆண்டுகளுக்கும் குறைவான வரலாறு கொண்ட தனிநபர்கள் அல்லது நிகழ்வுகளின் பெயர்கள், வணிகப் பெயர்கள், செல்லப் பிராணிகளின் பெயர்களை வைக்க அனுமதிக்கப்படாது என்றும், அதே நேரம் புராண இதிகாசங்களில் உள்ள பெயர்களை, கண்டுபிடிப்பாளர் பெயர்களை, புகழ் பெற்ற சிந்தனையாளர்களின் பெயர்களை குறுங்கோள்களுக்கு வைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரம் நிலவில் இதிகாசம், புராணம், நம்பிக்கை ஆகியவற்றின் பெயர்களை நிலாவில் வைக்கக்கூடாது என விதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகக சிவசக்தி என்ற பெயர் வானியல் ஒன்றியத்தால் நிராகரிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நிலவில் எந்த பகுதியையும் எந்த நாடும், எந்த தனி நபரும் உரிமை கொண்டாட முடியாது என்று வானியல் ஒன்றியத்தின் விதிகள் கூறுகிறது. இதனால் நிலவில் எந்த ஒரு மனிதராலும் இடம் வாங்கமுடியாது என்பதை வானியல் ஒன்றியத்தின் விதிகள் தெளிவுபடுத்துகின்றன.

அதே நேரம் நிலவில் இடம் வாங்கி தருவதாக ஏராளமான போலி இணையதளங்கள் செயல்பட்டு வருகிறது. இத்தகைய இணையதளத்தில் குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்தினால் நிலவில் இடம் வாங்கியதாக அந்த இணையதளம் மூலமாக ஆவணங்கள் வழங்கப்பட்டாலும், அதற்கு சர்வதேச அங்கீகாரம் என்பது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு, அத்தகைய இணையதளங்கள் பணம் பறிக்கும் நோக்கத்தோடு மட்டுமே செயல்பட்டு வருகின்றன என்றும், ஆகவே அதில் பணம் கட்டி நிலவில் இடம் வாங்கியதாக யாரும் ஏமாறவேண்டும் என்றும் பல்வேறு வானியல் அறிஞர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.

Also Read: லிபியாவை தாக்கிய புயல்.. உடைந்த அணைகள்.. உருத்தெரியாமல் போன நகரங்கள்.. 20 ஆயிரம் பேர் பலியான சோகம் ?