India

உயிர் பலி வாங்கும் நீட்: மேலும் ஒரு மாணவி விபரீத முடிவு.. ஒரே ஆண்டில் ஒரே பகுதியில் 25 மாணவர்கள் தற்கொலை

நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒன்றிய அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். அண்மையில் கூட குரோம்பேட்டையில் மாணவரும், அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதோடு தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசை கண்டித்து உண்ணா நிலை போராட்டத்திலும் ஈடுபட்டனர். நீட் தேர்வால் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒன்றிய அரசு அதனை கண்டும் காணாமல் இருந்து வருகிறது.

இந்த சூழலில், தற்போது ராஜஸ்தானில் 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற நகரில் நீட், ஐஐடி உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு அங்கிருக்கும் பலவேறு மாணவர்கள் விடுதியில் தங்கியும் பயின்று வருகின்றனர்.

அந்த வகையில் கோட்டா நகரில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த சூழலில் அந்த மாணவி இன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் மட்டுமே கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 25 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை : தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.. முழு விவரம் !