India
தண்ணீருக்காக தாக்கப்பட்ட பட்டியலின மாணவர்.. அரசுப் பள்ளி ஆசிரியரின் வெறிச்செயல்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி !
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் பகுதியில் அரசுப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்த பகுதியை சுற்றியுள்ள பல்வேறு மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் தலித் சமூகத்தை சேர்ந்த 12 வயது மாணவர் ஒருவரும் படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் கங்கா ராம் குர்ஜார் (Ganga Ram Gurjar) என்ற ஆசிரியர் ஒருவரும் பணியாற்றி வந்துள்ளார்.
அந்த பள்ளியில் ஆசிரியர்கள் குடிக்க தண்ணீர் குளிர்விப்பான் இருந்துள்ளது. குடிப்பதற்காக குளிர்ந்த தண்ணீர் கிடைக்கும் இதில், ஆசிரியர்கள், ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த சூழலில் சம்பவத்தன்று தலித் சமூகத்தை சேர்ந்த மாணவருக்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. எனவே அந்த குளிர்விப்பானில் உள்ள தண்ணீரை மாணவர் அருந்தியுள்ளார்.
இதனை கண்ட ஆசிரியர் கங்கா ராம் குர்ஜார், மாணவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அவரது சமூகத்தை சாடி பேசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பிரம்பை எடுத்து கடுமையாக தாக்கியுள்ளார். இதில் கடும் காயமடைந்த மாணவர், நடந்தவற்றை தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து இதனை கேட்டு அதிர்ந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் புகாரை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பீம் அமைப்பினருக்கு இந்த சம்பவம் குறித்து தெரியவரவே, அவர்கள் பள்ளி வளாகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்தே ஆசிரியர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து புகாரை திரும்ப பெரும்படி அந்த ஆசிரியரின் உறவினர்கள் கூறி மிரட்டியுள்ளனர். மேலும் ரூ.2 லட்சம் வழங்குவதாகவும், இதனை ஏற்று புகாரை திரும்ப பெறாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தங்களை மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவரின் சகோதரர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!