India
பக்கத்து வீட்டு நாயுடன் விளையாட்டு.. ரேபிஸ் நோயால் தாக்கப்பட்ட சிறுவன்.. தந்தை மடியில் உயிரிழந்த சோகம் !
உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் இருக்கும் சரண் சிங் காலனியில் யாக்கூப் என்ற நபர் வசித்து வருகிறார். இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் இவருக்கு திருமணமாகி 12 வயதில் ஷாவாஸ் என்ற மகனும் உள்ளார். இந்த சிறுவன் அந்த பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் குடும்பம் பொமரேனியன் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த நாயுடன் ஷாவாஸ் தினமும் விளையாடி வந்துள்ளார். சிறுவன் விளையாடும்போதெல்லாம், அவரது பெற்றோர் அவரை திட்டி வந்துள்ளர். இந்த சூழலில் இவர் வழக்கம்போல் அந்த நாயுடன் கடந்த மாதம் விளையாடும்போது, அது சிறுவனை கடித்து விட்டது.
சிறுவனோ நாய் கடித்தது குறித்து தனது பெற்றோருக்கு தெரிந்தால் தன்னை அடித்து திட்டுவார்கள் என்று எண்ணி, அவர்களிடம் இருந்து மறைத்துள்ளார். இதனால் அவருக்கு கடந்த 4-ம் தேதி முதல் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். தொடர்ந்து வீட்டிலேயே அவருக்கு பெற்றோர் கை வைத்தியம் செய்தும் சரிவரவில்லை. மேலும் அந்த சிறுவன் சாப்பாடை கண்டாலோ, தண்ணீரை கண்டாலோ வித்தியாசமாக நடந்துகொண்டுள்ளார்.
இதனால் பயந்துபோன பெற்றோர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கே மருத்துவர்கள் சிறுவனிடம் விசாரிக்கையில், கடந்த மாதம் பக்கத்து வீட்டு நாய் தன்னை கடித்ததாகவும், தான் இதனை பெற்றோரிடம் கூறவில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து சிறுவனுக்கு நாய் கடித்ததில் தான் ரேபிஸ் நோய் ஏற்பட்டு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் சிறுவனுக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பக்கத்து வீட்டு நாய்க்கு தடுப்பூசி போடாமல் இருந்தது தெரியவந்தது. எனினும் அந்த சிறுவனை நாய் கடிக்கவில்லை என்று பக்கத்து வீட்டார் வாதாடி வருகின்றனர்.
பக்கத்து நாயுடன் விளையாடியபோது, அது கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே போல் கேரளாவில் ஸ்ரீலட்சுமி (18) என்ற கல்லூரி மாணவி, நாய் கடி ஏற்பட்டு 1 மாதத்திற்கு பிறகு 'ரேபிஸ்' நோய் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!