India

அடுத்த Stop தீவு.. பார்வையற்ற மூதாட்டியை தவிக்கவிட்ட விஸ்தாரா விமானம்.. கொந்தளித்த மகன் !

இந்தியாவில் டாடா நிறுவனத்துக்கு சொந்தமான விஸ்தாரா ஏர்லைன்ஸ் (Vistara Airline) விமானம் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த விமானத்தில் பயணம் செய்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பயணியை விமான ஊழியர்கள் தவிக்க விட்டுவிட்டதாக பாதிக்கப்ட்டவரின் மகன் பரபர குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் UK 747 என்ற விமானத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மூதாட்டி ஒருவர் பயணித்துள்ளார். அப்போது விமானம் கொல்கத்தா வந்ததும் அங்கிருக்கும் பயணிகள் வெளியேறியுள்ளனர். எனவே இந்த மூதாட்டி தன்னை கூட்டி செல்ல ஊழியர்கள் யாரேனும் வருவார்கள் என்று காத்திருந்துள்ளார். ஆனால் யாரும் வரவில்லை.

அந்த சமயத்தில் விமானத்தை சுத்தம் செய்யும் ஊழியர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அந்த மூதாட்டி அழுவதை கண்ட அவர், அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது அந்த விமானம் அடுத்து அந்தமான் & நிகோபார் தீவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து சுத்தம் செய்ய வந்த ஊழியர் அருகில் இருந்த அலாரத்தை ஒலிக்க செய்து உடனே இதுகுறித்து விமான ஊழியர்களுக்கு தெரிவித்தார்.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் விமானத்தின் உள்ளே இருந்த பார்வையற்ற மூதாட்டியை பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டார். பின்னர் அவர் அவரது உறவினர்களால் பத்திரமாக வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுகுறித்து தற்போது பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு புகார் அளித்துள்ளார்.

ஆயுஷ் கெஜ்ரிவால் என்ற இளைஞர், ஒரு டிசைனராக இருந்து வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சம்பவத்தை குறிப்பிட்டு எவ்வாறு இதுபோல் விமான ஊழியர்கள் கவனக்குறைவாக இருந்ததாக கேள்வி எழுப்பினார். அதோடு பார்வையற்ற தனது தாய்க்கு உதவி தேவைப்படும் என்பதை டிக்கெட் புக் செய்யும் போதே தான் தெளிவாக குறிப்பிட்டதாக கூறிய வர, எவ்வாறு இதுபோன்று விமான ஊழியர்கள் செய்தனர் என்றும் ஆவேசப்பட்டுள்ளார்.

அதோடு பார்வையுடைய நாமே ஒரு இடத்தில் வழி தவறி போனால் திணறுவோம். ஆனால் பார்வையற்ற ஒரு மனிதரால் எவ்வாறு இதுபோன்ற சந்தர்ப்பங்களை கையாள முடியும் என்றும், விமானத்தில் இருக்கும் அனைவரும் இறங்கிச் சென்ற பின்பு பார்வை இல்லாமல் தனியே இருப்பது எவ்வளவு அதிர்ச்சிக்குரியதாக இருக்கும் என்றும் கோபமடைந்து விஸ்தாரா ஏர்லைன்ஸை குறிப்பிட்டு புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இவருக்கு குற்றம்சாட்டப்பட்ட விஸ்தாரா ஏர்லைன்ஸ் சார்பில் ஒரு ஊழியர், இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து, இனி இதுபோல் நடக்காது என்று விளக்கம் அளித்து உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பாக்கெட்டில் ஒரே ஒரு பிஸ்கட் குறைவு.. பிரபல பிஸ்கட் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் !