India

விளையாடும்போது சேதமான கால்பந்து.. தண்டனையாக சிறுவர்களை 2 நாள் பட்டினி போட்ட விடுதி வார்டன் !

சத்தீஸ்கர் மாநிலத்தின் சூரஜ்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. அந்த பள்ளிக்கு சொந்தமான விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியின் கண்காணிப்பாளராக பீட்டர் சாடோம் என்பவர் செயல்பட்டு வருகிறார்.

இந்த விடுதியில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று சில சிறுவர்கள் விடுதியில் இருந்த கால்பந்தை எடுத்து வழக்கம்போல விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த கால்பந்து அதீத அழுத்தம் காரணமாக வெடித்துள்ளது. அதன்பின் சிறுவர்கள் இதுகுறித்து விடுதி கண்காணிப்பாளரிடம் கூறியுள்ளனர்.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த விடுதி கண்காணிப்பாளர், கால்பந்தை சேதப்படுத்திய சிறுவர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக இரண்டு நாட்கள் உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளார். இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் சிறுவர்களுக்கு தங்களால் முடிந்த உணவுகளை வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அந்த சிறுவர்களின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில்,அவர்கள் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டிருக்கிறார்கள். அதோடு கல்வித்துறை அதிகாரிகளுக்கும் இதனை தெரியப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் பெரிதானதைத் தொடர்ந்து விடுதி கண்காணிப்பாளரை பணியில் இருந்து நீக்கி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எனினும் விடுதியில் போதிய இடவசதி இல்லை என்றும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு உரிய வசதிகள் செய்துதரப்படவில்லை என்றும் மாணவர்களின் பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Also Read: கால்பந்தில் கோடிகளை இறைக்கும் சவுதி அரேபியா.. ஐரோப்பாவுக்கு போட்டியாக உருவெடுக்குமா சவுதி ப்ரோ லீக் ?