India

ரூ.12 கோடி கோயில் நிலத்தை அபகரித்த புதுவை பாஜக MLAக்கள் : அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் !

புதுச்சேரியில் உள்ள பாரதி வீதியில் காமாட்சி அம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுரடி நிலம் காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட ரெயின்போ நகரில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்த சென்னையை சேர்ந்த தம்பதி, புதுச்சேரி சார்பதிவாளர் உள்ளிட்ட 15 பேரை சிபிசிஐடி போலீசார் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சூழலில் இந்த இடத்தின் ஒரு பகுதியை காமராஜர் நகர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது மனைவி, மகள் மற்றும் தாய் பெயரில் பத்திர பதிவு செய்துள்ளது தெரியவந்தது. மேலும் இவரது மகனும் நெல்லித்தோப்பு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான ரிச்சர்ட் என்பவரும் இந்த நிலத்தை தனது மனைவி பெயரில் பதிவு செய்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கோயில் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து பதிவு செய்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் மற்றும் அவருடைய மகன் ரிச்சர்ட்டை கைது செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே கோயில் நில விற்பனை மோசடி வழக்கில் புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய புதுச்சேரி காவல்துறைக்கு நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்றால், வழக்கின் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்படும் எனக்கூறி விசாரணையை அடுத்த வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரூ.12 கோடி மதிப்புள்ள காமாட்சியம்மன் கோயில் நிலத்தை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போலி பத்திரம் தயாரித்து அபகரிப்பு செய்வதற்கு மீன்வளத்துறை இயக்குநரும் அப்போதைய மாவட்ட பதிவாளர் பாலாஜி, பத்திரப்பதிவு இயக்குநர் ரமேஷ் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளதாக சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை அறிந்த அவர்கள் தலைமறைவான நிலையில், இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில், சென்னையில் அரை எடுத்து தலைமறைவாக இருந்த மீன்வளத்துறை இயக்குநர் பாலாஜியை சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பத்திரப்பதிவு இயக்குநர் ரமேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இருவர் மீது வழக்கு பதியப்பட்ட உடன் அவர்களை தற்காலிக பணியிட நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் விசாரணை வளையத்தில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: “என் மகளை தொந்தரவு செய்யாதே..” கண்டித்த தாய்.. அடித்து உதைத்த பாஜக பிரமுகர்.. அதிரடியாக கைது செய்த போலிஸ்