India

இந்திய நாட்டின் 140 கோடி மக்களையும் உளவு பார்க்கும் மோடி அரசு.. அம்பலப்படுத்திய இங்கிலாந்து நாட்டு ஊடகம்!

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகசாஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி மோடி அரசு ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள் , வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்களை உளவு பார்க்கப்படுவதாக 2021ம் தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போது நடந்த மழைக்கால கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சிகள் பெகசாஸ் உளவு பென்பொருள் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் மோடி அரசு பதில் எதுவும் தெரிவிக்காமல் நாடாளுமன்ற அவையை ஒத்திவைத்தது. இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை சென்றது.

இந்நிலையில், அதிநவீன உளவுக் கருவிகளைக் கொண்டு இந்திய நாட்டின் 140 கோடி மக்களையும் மோடி அரசு உளவு பார்க்கிறது என இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபைனான்சியல் டைம்ஸ் என்ற பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், இஸ்ரோலை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செப்டியர் மற்றும் காக்னைட் என்ற நிறுவனங்களிடம் இருந்து அதிநவீன உளவு கருவிகளை மோடி அரசு வாங்கியுள்ளது. இந்த கருவிகளைக் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் மற்றும் செல்போன் டவர்களின் பொருத்தியுள்ளது.

இந்த கருவிகள் மூலம் மக்களின் செல்போன் தகவல் பரிமாற்றம், ஈ-மெயில்கள் என அனைத்தையும் கண்காணித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், சிங்கப்பூரின் சிங்டெல் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கண்காணிக்கபட்டுகிறார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் பொதுமக்கள் இணையத்தில் என்ன பயன்படுத்துகிறார்கள் என்பதையும் செப்டியர் உளவு கருவி மூலம் கண்காணிக்கப்படுகிறது என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இந்திய நாட்டின் 140 கோடி மக்களையும் நவீன உளவுக் கருவிகள் கண்காணிப்பதாகத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மோடி ஆட்சியின் உளவு ரகசியம் அம்பலமாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வகுப்பறையில் ஹிஜாப் சரியாக அணியாத பள்ளி மாணவிகள்.. ஆத்திரத்தில் மொட்டையடித்துவிட்ட கொடூர ஆசிரியர் !