India
“தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கெளரி லங்கேஷ் கொலைகள்: பொதுவான நோக்கம் உள்ளதா?” - CBIக்கு உச்சநீதிமன்றம்!
சமூக செயற்பாட்டாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கெளரி லங்கேஷ், கல்புர்கி ஆகியோர் ஒரே காரணத்துக்காக வெவ்வேறு காலங்களில் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர். அது என்ன காரணம் என்றால், 'எழுத்து'. எழுதியதற்காகவே அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
இதில் முதலில் கொல்லப்பட்டவர் நரேந்திர தபோல்கர் (Narendra Dabholkar). மகாராஷ்டிர மாநிலம் பூனேவை சேர்ந்த இவர் மருத்துவர் மற்றும் எழுத்தாளர் ஆவர். மூட நம்பிக்கைக்கு எதிராக பல விஷயங்களை செய்து வந்த இவர், அதற்காக ஒரு கழகத்தையும் உருவாக்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.
அதுமட்டுமின்றி அம்மாநில சட்டமன்றத்தில் மூட நம்பிக்கைக்கு எதிராக மசோதாவை கொண்டு வரவும் முனைப்பு காட்டினார். ஆனால் இந்த மசோதா இந்து நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று பாஜக, சிவசேனா கட்சிகள் கருத்துகளையும், கண்டனங்களையும் முன்வைத்தால் இது கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும் தனது முயற்சியை விடாமல் அவர் மேற்கொண்டதால், கடந்த 2013, ஆகஸ்ட் 20-ம் தேதி நடைப்பயிற்சி மேற்கொண்டபோது நரேந்திர தபோல்கர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதே போல் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் 82 வயது சி.பி.ஐ கட்சியின் மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரே (Govind Pansare). இவர் சனாதானத்தையும், பாஜக சிந்தனையும், இந்துத்துவாவையும் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தவர். தொடர்ந்து பாஜக, சிவசேனாவுக்கு கோட்சேவை புகழ்ந்ததற்கும் இவர் தனது வலுவான எதிர்ப்புகளை தெரிவித்தார்.
இப்படியே தொடர்ந்து மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் பாஜகவுக்கு எதிராக தனது எதிர்ப்புகளை தொடர்ந்து வந்த இவர், கடந்த 2015, பிப்ரவரி 20-ம் தேதி, தனது மனைவியுடன் காலை நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது அவரது வீட்டின் அருகாமையில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும் கர்நாடகாவை சேர்ந்தவர் எம்.எம்.கல்புர்கி (MM Kalburgi). சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், ஹம்.பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பழமையான கன்னட இலக்கியங்களின் ஆய்வறிஞர், கல்வெட்டு அறிஞர் என பன்முகத் தன்மை கொண்டவராக இவர் இருந்தார். இவரும் சனாதன கொள்கைக்கு எதிராகவும், இந்துத்வ பாஜகவுக்கு எதிராகவும் குரல் எழுப்பியவர்.
இதனாலே தொடர்ந்து பல்வேறு கொலை மிரட்டலுக்கும் உள்ளானார். இருப்பினும் அதனை கண்டுகொள்ளாத இவர் தொடர்ந்து குரல் எழுப்பினர். இந்த இந்த சூழலில் கடந்த 2015, ஆகஸ்ட் 30-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தொடர்ந்து கர்நாடகாவில் வெளியாகும் 'லங்கேஷ்' என்ற கன்னட வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர் கௌரி லங்கேஷ் (Gauri Lankesh). பத்திரிகையாளரான இவர், இந்துத்வா கொள்கைகளுக்கு எதிராக, மோடி அரசின் பாசிச போக்கை கண்டித்து வந்ததால் இந்துத்வா கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி போன்றோருக்காவும் வலுவாக குரல் எழுப்பி வந்தார்.
இந்த சூழலில் கடந்த 2017, செப்டம்பர் 5-ம் தேதி, பணி முடிந்து இரவு 8 மணிக்கு வீட்டுக்கு திரும்பியபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கைத்துப்பாக்கி கொண்டு 7 முறை சுட்டது. துப்பாக்கிச் சூட்டில் கௌரி லங்கேஷின் மார்பு, கழுத்து, வயிறு ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார்.
இப்படி மேற்கண்ட 4 பேரும் சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமாக அறியப்படுபவர்கள். அனைவரும் இந்துத்வா எண்ணத்துக்கு, பாஜக, பார்ப்பனியத்துக்கும் எதிராக தங்கள் கண்டன குரல்களை ஓங்கி ஒலித்து கொண்டிருந்தனர். இதனாலே அனைவரும் துப்பாக்கியால் நடுரோட்டில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த 4 பேரின் படுகொலை தொடர்பான வழக்கு தற்போது வரை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கூட, இதற்கான விடை இன்னும் கிடைக்கவில்லை. இந்த கொலை தொடர்பாக இந்துத்வா அமைப்பினர் சில பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிலர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கான நீதி இன்னுமும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், 2013-ல் கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கரின் வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் கண்காணித்து வந்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு இதனை மேலும் கண்காணிக்க முடியாது என்று தெரிவித்தது. மும்பை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து நரேந்திர தபோல்கரின் மகள் முக்தா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சுதன்சு தூலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது முக்தா தபோல்கர் தரப்பில் வாதத்தில் ஈடுபட்ட மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், சமூக செயற்பாட்டாளர்களான தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் கொலைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளது.
இந்த 4 கொலை வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமல் தலைமறைவாகவே உள்ளனர். இந்த சூழலில் மும்பை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை கண்காணிக்க மறுத்திருப்பது சரியானது அல்ல என்று வாதிட்டார்.
தொடர்ந்து சி.பி.ஐ தரப்பில் இருந்து எதிர்வாதம் செய்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி, இந்த வழக்கு தொடர்பாக 20 பேர் விசாரிக்கப்பட்டதாகவும், அதில் தபோல்கர் கொலை வழக்கில் 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டதாகவும், அதிலும் 3 பேருக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், மீதம் இருக்கும் 2 பேருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து சமூக செயற்பாட்டாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கெளரி லங்கேஷ், கல்புர்கி ஆகியோரின் கொலைகளுக்கு பின்னால் பொதுவான நோக்கம் உள்ளதா? என்று சிபிஐக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு இது தொடர்பாக விசாரணை நடத்துமாறும் அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தபோல்கர் மகள் தரப்புக்கு 2 வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!