India

சக மாணவிகளுடன் பேசியதை கண்டித்த ஆசிரியர்.. நடுரோட்டில் கத்தியால் குத்திவிட்டு போலிசில் சரணடைந்த மாணவர் !

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே மீரா ரோடு அமைந்துள்ளது. இங்கு தனியார் கோச்சிங் சென்டர் ஒன்றை ராஜு தாகூர் (26) என்ற இளைஞர் நடத்தி வந்துள்ளார். இங்கு 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயின்று வந்தனர். அப்போது காஷ்மிரா என்ற இடத்தில் உள்ள குஜராத்தி சாலில் 17 வயது மாணவர் ஒருவரும் இங்கு படித்து வந்துள்ளார்.

இந்த சூழலில் இந்த மாணவர் நன்றாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மாணவர், அங்கு பயிலும் சக மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அவரது கவனம் படிப்பில் இல்லை என்று அந்த ஆசிரியர் கண்டித்துள்ளார். அத்தனை பேர் முன்னிலையிலும் அவரை வசை பாடியுள்ளார். மேலும் அடித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனை தனது மனதிலே வைத்திருந்த மாணவர், தனது ஆசிரியரை பழிவாங்க எண்ணியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று அந்த ஆசிரியர் குஜராத்தி சாலில் தனது நண்பர்கள் சிலருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்த மாணவர், தனது முன்னாள் ஆசிரியர் ராஜூவை கீழே தள்ளிவிட்டு தாக்கியுள்ளார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதையடுத்து கத்தி குத்து பட்ட ஆசிரியர் ராஜூவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மாணவர், உடனே போலீசில் கத்தியோடு சரணடைந்தார். தொடர்ந்து அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

மேலும் இது தொடர்பாக விசாரிக்கையில், அந்த பகுதியில் அமைந்திருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, அதில் மாணவர் கத்தியால் தாக்கிய நிகழ்வு பதிவாகியிருந்தது. தற்போது அனைத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் போலீசார் மாணவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பகுதி நேர வேலை : டெலிகிராமுக்கு அனுப்பப்பட்ட Link.. லட்சகணக்கில் பணத்தை இழந்த நபர் - 5 பேர் அதிரடி கைது!