India
அப்போ உ.பி.. இப்போ மும்பை.. ஒரே நாளில் 17 நோயாளிகள் உயிரிழப்பு.. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி !
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே இருக்கும் தானேவில் அமைந்துள்ள கல்வாவில் சத்திரபதி சிவாஜி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சுற்றியுள்ள மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் இங்கு சிகிச்சை பெற்று வந்த 17 நோயாளிகள் நேற்று இரவு நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.
அதாவது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த 14 நோயாளிகளும், பொது வார்டில் சேர்க்கப்பட்டிருந்த 3 நோயாளிகளும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உயிரிழப்புக்கு காரணம், மருத்துவமனையின் மருத்துவர்கள் என்று உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஒரே இரவில் 17 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நோயாளிகளில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் என்றும், அவர்களை மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகமும் முறையாக கவனிக்கவில்லை என்றும், மருந்து கூட கொடுக்கவில்லை என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே இந்த மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி, மருத்துவர்களின் கவனக்குறைவு உள்ளிட்டவை குறித்து மக்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர். எனினும் அம்மாநில அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் விளைவே தற்போது இந்த நிகழ்வு நிகழ்ந்ததாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இதே அரசு மருத்துவமனையில், மருத்துவர்களின் கவன குறைவால் 5 நோயாளிகள் உயிரிழந்த நிலையில், தற்போது ஒரே இரவில் 17 நோயாளிகள் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து "ஒரே நேரத்தில் 17 நோயாளிகள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கும் துரதிஷ்டவசமான சம்பவமாகும். 5 நோயாளிகள் உயிரிழந்தபோதே மாவட்ட நிர்வாகம் சுதாரித்துக்கொண்டு தேவையான நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த உயிரிழப்புகளை கட்டுப்படுத்தி இருக்கலாம்" என்று அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இதே போல் உத்தர பிரதேசத்தில் ஒரே அரசு மருத்துவமனையில் கடந்த 16 மாதங்களில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு HIV பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!